நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றம்

09 Feb, 2022 | 10:24 AM
image

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதா பாஜக தவிர்த்த ஏனைய அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மருத்துவக் கல்வியைப் பெறுவதற்குரிய நுழைவுத் தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு பெப்ரவரி முதல் திகதியன்று திருப்பி அனுப்பினார். 

இதைத்தொடர்ந்து பெப்ரவரி 5ஆம் திகதியன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அதிமுகவும், பாஜகவும் பங்குபற்றவில்லை. 

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன் தமிழக அரசின் சட்டம் இயற்றும் இறையாண்மையை ஆளுநர் ஆர். என். ரவி கேள்விக்குறியாக்கியிருப்பதாகவும் முதல்வர் முக ஸ்டாலின் குற்றம் சுமத்தியிருந்தார். 

இதைத் தொடர்ந்து பெப்ரவரி 8ஆம் திகதி தமிழக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் பேரவைத் தலைவர் தலைமையில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு தரப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தாக்கல் செய்தார். 

மசோதாவிற்கு தொடக்க நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.

அதனைத் தொடர்ந்து மு க ஸ்டாலின் உரையாற்றினார்

அவர் தெரிவித்தாவது

'' நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்காக மட்டும் நாம் இங்கு கூடவில்லை. கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டவும் கூடியிருக்கிறோம். 

ஜனநாயகம் காக்க, கல்வி உரிமையை வென்றெடுக்க, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட நாம்  கூடியிருக்கிறோம். அந்தவகையில் எனது பொது வாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்நாள் அமைந்துள்ளது. 

நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டப்பேரவையால் முடியும். திமுக ஆட்சி பொறுப்பேற்று 8 மாத காலத்திற்குள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். 

1968ஆம் ஆண்டில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி இருமொழிக் கொள்கையை நிறைவேற்றினார் பேரறிஞர் அண்ணா. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும். 8 கோடி மக்களை பிரதிபலிக்கக் கூடிய இந்த சட்டப்பேரவையில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும்.

நீட் தேர்வு ஒன்றும் அரசியலமைப்பு விதிப்படி உருவாக்கப்பட்டதல்ல. நீட்தேர்வு கொண்டுவரப்பட்டபோது 115 வழக்குகள் போடப்பட்டது. 

அதில் தமிழகம் தான் முதன்மை மாநிலம். அதன்படி நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியது. 

இதனால் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மாற்றி வழங்கியது. 

இதன்பின்னர் நீட் தேர்வை பாஜக அரசு அமல்படுத்தியது. நீட் தேர்வு முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு சாதகமானது. 

இதற்காக லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்டது என்று சொல்லலாம். 

நீட் தேர்வு மாணவர்களிடையே மருத்துவ கனவில் தடுப்புச்சுவரை எழுப்புகிறது,உனக்கு தகுதி இல்லை என்று தடுக்கிறது.  நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் நான்கு பேர், 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வில் 5 பேர், 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வில் 15 பேர் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைகேடு வழக்கு போடப்பட்டுள்ளது.

கோவை மாணவர் ஒருவர் மதிப்பெண் மாறியதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது பிரச்சனைக்கு பதிலளிக்காமல் 15 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தது. 

பல்வேறு குளறுபடிகளுடன் ஏழை எளிய மாணவர்கள் இடையே தகுதி என்ற பெயரில் ஓரங்கட்ட கொண்டுவரப்பட்ட தேர்வு தான் நீட் தேர்வு.

மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வுதான் நீட்தேர்வு. அது ஒரு பலிபீடம்.  அரியலூர் அனிதா உள்ளிட்ட மாணவச் செல்வங்களை நாம் நீட் தேர்விற்காக இழந்திருக்கிறோம். 

இந்திய மாணவர்களையும் பலி கொடுத்திருக்கிறது. 

நீட் தேர்வு குறித்து ஒட்டுமொத்த சமுதாயமும் மாணவர்களின் பெற்றோர்களின் நிலைப்பாட்டையே அரசு முன்வைத்திருக்கிறது.

நீட் தேர்வு குறித்து நீதியரசர் ஏ. கே. ராஜன் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்பவே, சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

பாஜக உறுப்பினர்கள் நீங்கலாக அனைத்து உறுப்பினர்களும் நீட் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த மசோதா ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வையும், பேரவையின் இறையாண்மையும் எடுத்துரைக்க கூடியது.  ஆனால் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது சட்டப்பேரவையின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

நீதியரசர் ஏ கே ராஜன் குழு அளித்த தரவுகள், ஊகங்களின் அடிப்படையிலினவை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் அனைவரிடமும் இருந்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. 

ஒரு லட்சம் பேரின் கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட்டது. 

அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆளுநர் இதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பி விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு 22 ‌ஆம்  நூற்றாண்டின் அறிவு தீண்டாமை. தகுதி என்ற போர்வையில் உள்ள நீட்தேர்வு என்ற அறிவு தீண்டாமையை போக்க வேண்டாமா..? 

கருப்பாக இருந்தவர்கள் உள்ளே வரக்கூடாது என்பது எப்படி பாகுபாடோ...  மாநில பள்ளி கல்வித் திட்டத்திலிருந்து கேள்விகள் தயாரிக்காததும் பாகுபாடு தான். 

அந்த வகையில் இந்த பாகுபாட்டை அகற்றவேண்டும். உயர் கல்வி குறித்து முடிவு எடுப்பது மாநில அரசின் அதிகாரம் என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.

நீட்தேர்வு அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்படவில்லை. மாறாக அரசியல் அமைப்பின் அனைத்து  அடிப்படைகளுக்கும் எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. பணக்கார நீதியை பேசுகிறது.

சமத்துவம் என்பது அரசியலமைப்பின் அடிப்படை. அந்த சமத்துவத்திற்கு எதிரானது நீட் தேர்வு. 

ஐந்து ஆண்டுகளாக இதில் உள்ள அநீதி பற்றி பேசியும் இன்னும் சிலருக்கு இதுகுறித்து புரியவில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம்.

உண்மையில் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று வெற்றி பெறும் வரை போராட்டத்தை விடமாட்டோம் என்று அழுத்தம் திருத்தமாக இங்கு கூறுகிறேன்.'' என உரையாற்றினார்.

அவரின் உரை நிறைவடைந்ததும் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் சபாநாயகர் அறிவித்தார். 

அத்துடன் இந்த தீர்மானத்தை இன்றே தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாத்திற்கு புகலிடம் வழங்குவது என்பது புட்டினின்...

2024-12-09 16:22:53
news-image

டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

2024-12-09 16:23:30
news-image

தென்கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை -ஊழல் விசாரணை...

2024-12-09 12:38:11
news-image

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ரஸ்யாவில்

2024-12-09 06:40:40
news-image

சிரிய ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சி வீழ்ந்தது...

2024-12-08 20:10:06
news-image

ஆசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் – ரஸ்யா

2024-12-08 18:06:43
news-image

ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி...

2024-12-08 10:31:49
news-image

சிரிய தலைநகர் டமஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் வசம்

2024-12-08 10:14:41
news-image

சிரிய ஜனாதிபதி நாட்டிலிருந்து தப்பி வெளியேறினார்

2024-12-08 10:16:43
news-image

சிரியாவில் கிளர்ச்சிப் படையால் பதற்றம்: இந்தியர்கள்...

2024-12-08 09:58:09
news-image

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரம் ஹோம்ஸ்-...

2024-12-08 07:10:38
news-image

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல்...

2024-12-07 20:03:47