தாடை பகுதியில் ஏற்படும் வார்தின் கட்டியை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை

By T Yuwaraj

08 Feb, 2022 | 09:04 PM
image

எம்முடைய காதின் அடிப்பகுதியிலும், தாடையின் தொடக்கப் பகுதியிலும் அமையப்பெற்றுள்ள பரோடிட் கிளான்ட்  எனப்படும் உமிழ்நீர் சுரப்பியில் உண்டாகும் கட்டியை சத்திர சிகிச்சை மூலம் எளிதாக அகற்றலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் இத்தகைய கட்டியை உரிய தருணத்தில் சத்திரசிகிச்சை மூலம் அகற்றாவிட்டால் அவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இன்றைய திகதியில் 50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் பலருக்கு வார்த்தின் கட்டி எனப்படும் உமிழ்நீர் சுரப்பியில் கட்டி ஏற்படுகிறது. எம்முடைய காதின் அடிப்பகுதியில் பரோடிட் கிளான்ட், தாடையின் வேறு பகுதியில் சப்லிங்குவல் கிளான்ட் மற்றும் சப்மாண்டிபுலர் கிளான்ட் ஆகிய சுரப்பிகள் உள்ளன. 

இவற்றில் ஏதேனுமொரு சுரப்பியில் கட்டி ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும். அதில் பரோடிட் கிளான்ட் எனப்படும் உமிழ்நீர் சுரப்பியில் ஏற்படும் கட்டியை தான் வார்த்தின் கட்டி என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள்.

பிறக்கும்போது மரபியல் காரணங்களாலும், பச்சிளம் குழந்தையாக வளரும் பருவத்தில் ஏற்படும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாகவும், ஏதேனும் விபத்தின் காரணமாகவும் இத்தகைய கட்டிகள் ஏற்படுகின்றன. இத்தகைய கட்டிகள் பெரும்பாலும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றாலும், இதனை உரிய தருணத்தில் சத்திர சிகிச்சை செய்து அகற்றாவிட்டால், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. 

சில தருணங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தாடையின் இரண்டு புறங்களிலும் இத்தகைய கட்டிகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு .

இத்தகைய கட்டி ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு காதின் கீழ்ப் பகுதியில் வலி உண்டாகும். சிலருக்கு அப்பகுதியில் வலி ஏற்படுத்தாத கட்டி நீண்ட நாட்களாகவே அமைந்திருக்கும். அவை கடந்த சில தினங்களாக வீக்கமடைந்து, வலியை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு இத்தகைய அறிகுறிகளுடன் காது வலி மற்றும் காய்ச்சலும் ஏற்படலாம். இதன் போது உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

அவர்கள் கட்டியை பரிசோதித்து எம்ஆர்ஐ ஸ்கேன் மேற்கொள்வதற்கு பரிந்துரைப்பர். நோயாளியின் ஆரோக்கியம் குறித்து பல பரிசோதனைகளை மேற்கொண்ட பின், அவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றுவார்கள்.

டொக்டர் ஜாகிர் உசேன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right