(ஆர்.ராம்)

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷவும் அவருடைய ஆதரவணியினரும் பங்கேற்கும் பேரணிகள், கூட்டங்கள் தொடர்பாக அதிகம் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் எமக்கில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியினரின் ஏற்பாட்டில் இரத்தினபுரியில் கூட்டம் நடைபெற்றுவருகின்றது. இவ்வாறான நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐ.ம.சு.மு.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மகிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மக்கள் தமது ஆணையை வழங்கி தெளிவான செய்தியை கூறியிருக்கின்றார்கள். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒன்றிணைந்த தரப்பினர் தமது அரசியல் நோக்கங்களுக்காக பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வீழ்த்தும் வகையில் செயற்படுகின்றார்கள். குறிப்பாக தேங்காய் உடைத்தார்கள், கண்டியிலிருந்து கொழும்புக்கு பேரணி வந்தார்கள், வெலகமவில் கூடினார்கள், பௌத்த விகாரைகளில் சமய வழிபாடுகளை நடத்தினார்கள். அவை எவையுமே வெற்றியளிக்கவில்லை. 

இவ்வாறான நிலையில் தான் இரத்தினபுரி கூட்டத்தை நடத்துகின்றார்கள். அதுகுறித்து நாம் அதிகம் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. காரணம் மக்கள் எம்முடனேயே இருக்கின்றார்கள். அதனை எமது கட்சியின் 65ஆவது மாநாட்டில் மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். அவ்வாறிருக்கையில் இவர்களின் கூச்சல்களுக்கும் பொய்யான பரப்புரைகளுக்கும் நாம் அஞ்சவேண்டியில்லை. இவர்களின் உண்மையான பக்கத்தை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். ஆகவே புதிய அரசியல் சக்தியை அவர்களால் உருவாக்க முடியாது என்றார்.