(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதிபதி தேர்தலில் மைத்திரி,சஜித்,அனுர,சம்பிக்க,ரணில் ஆகியோர் எமக்கு பெரும் சவால் அல்ல என விவசயாத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தொற்று பரவலை கருத்திற் கொண்டு கடந்த இரண்டுவருட காலமாக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இருந்து விலகியிருந்தோம்.

கிடைத்த சந்தர்ப்பத்தை எதிர்தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெறும் காலம் வரை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரபரீட்சையில் தோல்வியடைந்த 1இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது.

60ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டதுடன்,ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி செயற்திட்ட பணிகள் செயற்படுத்தப்பட்டன.

கொவிட் தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டம் சிறந்த முறையில் வெற்றிப் பெற்றுள்ளது. நாட்டு மக்கள் உயிர்வாழ்வதற்கான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொவிட் வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்பட்டிருந்தால் நாட்டையும்,நாட்டு மக்களையும் கடவுள் காப்பாற்றியிருக்க வேண்டும்.

கொவிட் தாக்கத்தினால் அதிக மரணங்கள் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்திருக்கும். மைத்திரி,ரணில் முரண்பாட்டிற்கு நாட்டு மக்கள் பலியாகியிருப்பார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க,மைத்திரிபால சிறிசேன ,பாட்டலி சம்பிக்க ,ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இவர்கள் ஒரு சவால் அல்ல.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பொதுஜன பெரமுனவே வெற்றிப் பெறும் ஜனாதிபதி கோட்டாபய   ராஜபக்ஷவே மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார் என்றார்.