சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளனர்.

அதன்படி குறித்த உத்தரவை உடனடியாக புத்தளம் மற்றும் சிலாபம் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்குமாறும், அங்கு பிணை நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது  சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க கடந்த 28 ஆம் திகதி மீண்டும் புத்தளம் மேல் நீதிமன்றம் மறுத்தது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிரான சாட்சி விசாரணைகள் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போதே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்திரதிஸ்ஸ முன்வைத்த பிணைக் கோரிக்கை குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கை விசாரிக்கவென விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேவர்தனவினால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்த நிலையில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.