(ஜெ.அனோஜன்)

2030 இறுதி வரை சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) இயக்க நாசா உத்தேசித்துள்ளது.

அதன் பின்னர் அதனை பசுபிங் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் மூழ்கடிப்பதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.

Image

2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வகம், 19 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்களுடன் 227 கடல் மைல் தொலைவில் பூமியை சுற்றி வருகிறது.

17,500 மைல் வேகத்தில் 92 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த நிலையம் பூமியைச் சுற்றி வருகின்றது.

ISS இல் உள்ள விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் முறையே 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களை காணுகின்றனர்.

எவ்வாறெனினும் நாசா இதன் சேவையை எதிர்வரும் 2031 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.

அதுவரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையம் 2030 வரை செயல்படும்.

அதன் பின்னர் தெற்கு பசுபிக் பெருங்கடல் மக்கள் வசிக்காத பகுதியான பாயிண்ட் நெமோ என்றும் அழைக்கப்படும் பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை 2030 ஆம் ஆண்டுக்கு பின்னர் விழ வைப்பதே திட்டம் என்று நாசா கூறுகிறது.

பாயிண்ட் நெமோ என்பது பசுபிக் கடலில் உள்ள புள்ளியாகும், இது நிலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது மற்றும் பல விண்கலங்களுக்கு இது நீர் கல்லறையாக உள்ளது.

இப்பகுதி நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 3,000 மைல் தொலைவிலும், அண்டார்டிகாவிற்கு வடக்கே 2,000 மைல் தொலைவிலும் உள்ளது.

Image

மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற விண்வெளி பயண நாடுகள் 1971 முதல் 263 க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைகளை அங்கு மூழ்கடித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.