ஜீவன் விரும்பினால் வெளியில் இருந்து ஆதரவளிக்கலாம் : மோடிக்கான கடிதத்தில் இ.தொ.க குறித்து மனோ தெரிவிப்பு

06 Feb, 2022 | 12:50 PM
image

(ஆர்.ராம்)

இந்தியப் பிரதமர் மோடிக்கான கடித ஆவணத்திற்கு ஜீவன் விரும்பினால் வெளியில் இருந்து ஆதரவளிக்கலாம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மலையகத் தமிழ்க் கட்சிகள் கடிதமொன்றைத் தயாரித்து வரும் நிலையில் அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளீர்க்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் மோடிக்கான மலையக தமிழ்க் கட்சிகளின் வரைபு தயாராகி ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. இனி கலந்துரையாடல்தான் மீதமாக உள்ளது. அது விரைவில் ஆரம்பித்து நடைபெறும். அதையும் நாம் கூட்டணியாகவும் தனித்தனி கட்சிகளாகவும் அணுகுகிறோம். எது உசிதமாக இருக்கின்றதோ அதனைச் செய்வோம். இதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.

இதேவேளை, இ.தொ.கா. உள்வாங்கப்படுமா என்ற விடயத்தல் இ.தொ.கா.வுக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாக, கடித ஆவண வரைவுப்பணியை முன்னெடுக்கும் மலையக சிவில் செயற்பாட்டாளர்கள் எனக்கு கூறியுள்ளனர். ஆகவே இந்த விடயத்தினை எதிரணி அரசியல் பரப்பில் மாத்திரம் வைத்துக்கொள்ள நாம் அதிகளவில் விரும்புகிறோம்.

ஏனெனில் அரசில் இருக்கும் கட்சிக்கு எமது எல்லா நிலைப்பாடுகளுடனும், முன்னெடுப்புகளுடனும் உடன்பட முடியாத தர்ம சங்கடம் ஏற்படலாம். ஆகவே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் எமது ஆவணத்தை படித்து விட்டு, இயலுமானால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right