(ஆர்.ராம்)

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கு முழுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு தமிழ்க் கட்சிகள் கடிதமொன்றை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளன.

இந்தக் கடிதத்தினை அனுப்புவது தொடர்பான மெய்நிகர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனிடத்தில் கடிதத்தின் வரைவினை தயாரிக்கும் பொறுப்பினை ஒப்படைத்துள்ளன.

தற்போதைய நிலையில் ரெலோ, புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகியன இக்கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு இணக்கம் கண்டுள்ளன.

அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணத்தில் கையொப்பமிட்ட ஆறு அரசியல் கட்சிகளையும் ஏழு தலைவர்களையும் இந்தக் கடிதத்திலும் உள்வாங்குவதற்கு அடுத்தகட்டமாக நடவடிக்கைகளை எடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடமும் கையொப்பத்தினை பெறுவது பற்றி பேச்சுக்கள் முன்னெடுக்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.