(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 6 வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிலாபம்

சிலாபம் பொலிஸ் பிரிவில் சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி மாமரமொன்றின் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன் போது லொறியின் முன்பகுதியில் இடதுபுற இருக்கையில் அமர்ந்திருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதுடைய , அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஆவார். லொறி சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார்

மன்னார் பொலிஸ் பிரிவில் மதவாச்சி - தலைமன்னார் வீதியில் லொறியுடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி , பின்னால் பயணித்த பெண் மற்றும் அவரது 6 வயது மகன் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அம்பாறை - கொனாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். லொறி மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளின் கவனக்குறைபாட்டினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மொனராகலை

மொனராகலை - தணமல்வில பொலிஸ் பிரிவில் உடவலவ வீதியில் மஹகல்வௌ பிரதேசத்தில் சூரியவௌ நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறியொன்று எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 19 வயதுடைய தணமல்வில - சூரியஆர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஆவார். சிறிய ரக லொறி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனின் கவனக்குறைபாடே விபத்திற்கு காரணம் என்று ஆரம்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

தணமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கம்பஹா

கம்பஹா பொலிஸ் பிரிவில் அஸ்கிரிவல்பெல பிரதேசத்தில் உடுகம்பொல நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று எதிர்திசையில் வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மற்றும் அவருடன் பயணித்த சிறுமி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இருவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 6 வயதுடைய சிறுமியும் , 42 வயதுடைய நபரும் ஆவர். இவர்கள் கம்பஹா - உக்கல்பொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். கனரக வாகன சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் ஆகிய இருவரதும் கவனயீனமே விபத்திற்கான காரணம் ஆகும். 

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.