தெற்கில் இனவாதிகளும் கோத்திரவாதிகளும் இணைந்து வடக்கில் சமஷ்டி உதயமாக போகின்றதாகவும்  அதற்கு  நல்லாட்சி அரசாங்கம் துணை போகின்றது என்றும்  பொய்யான விடயங்களை   சிங்கள பௌத்த மக்களிடத்தில் பரப்பி இனவாத தூண்டுதல்களை ஏற்படுத்துகின்றனர்.  அத்துடன்  வடக்கு முதல்வரின் செயற்பாடுகளும் அவர்களை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன என்று   சமூக வலுவூட்டல் மற்றும நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையிலான இலங்கைக்குள் சகலருக்கும் நீதியான வகையில் அமையும். எனவே அரசின் பலமான பங்காளியான சுதந்திர கட்சி சமஷ்டியை ஒருபோதும் ஏற்காது ஏற்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

சமூக வலுவூட்டல் மற்றும நலனோம்புகை அமைச்சின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் எதிர்தர்ப்புகள் பலவிதமாக விமர்சிக்கின்றன.  இந்த அரசாங்கம் சமஷ்டி அட்சியை வழங்கப்போகின்றது,ஈழத்திற்கான சகல ஏற்பாடுகளும்   நிறைவு பெற்றுள்ளன, நாடு துண்டு துண்டுகளாக பிளவுப்படுத்தபட போகின்றது, அரசியலமைப்பில் தற்போது வரையுள்ள பௌத்த மத்த்தின் தனித்துவ தன்மை இல்லாது செய்யப்பட போகின்றது. என்ற வகையில் உண்மைக்கு புறம்பான பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர். 

இது இந்த நாட்டின் சிங்கள பௌத்த மக்களிடத்தில் இனவாத துண்டுதல்களை ஏற்படுத்தும் செயற்பாடு என்பதை அரசாங்கம் நன்றாக விளங்கிக்கொண்டுள்ளது. இதனால் தெற்கின் இனவாதிகள் தம்மை வலுப்படுத்திக்கொண்டு குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முனைகின்றனர். இவ்வாறான நிலையில் வடக்கு முதலமைச்சர் இந்த இனவாத தீயை மேலும் எறியச் செய்யும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். 

இவற்றின் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்றிருந்த போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் வடக்கு முதல்வரையும் அருகில் வைத்துக்கொண்டு மாகாணங்களை பகிர்வதில் தமக்கு ஒருபோதும்  உடன்பாடில்லை என்றும் பிரித்தானியர்களால் மேற்கொள்ளப்பட்ட பிளவுக்கும் நாங்கள் முரண்பட வேண்டியதும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.  எனவே இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என்ற தனித்தன்மையை நாம் தொடர்ந்தும் பேணுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 தற்போதும் சிலர் இலங்கையின் ஒற்றையாட்சி  தன்மையில் வேறுபாடுகள் ஏற்படும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் ஒருபோதும் சமஷ்டி ஆட்சிக்கு இலங்கையில் இடமில்லை என்ற நிலைப்பாட்டில் சுதந்திர கட்சி உறுதியாக உள்ளது. இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும ; உறுதியாகவுள்ளார். அதேநேரம் அவர் ஒரு இனவாதியும் அல்ல. அதனால் பௌத்த மதம் மற்றும் ஏனைய மதங்களின் தனித்தன்மையும் பாதுகாக்கப்படும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

தற்போது வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாத செயற்பாடுகள் இல்லை என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷ வுக்கு  சில தினங்களுக்கு முன்பு வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் பிரபாரனின் செயற்பாடுகளாகவும் அவரின் கோரிக்கைகள் பிரபாகரனின் கோரிக்கைகளாகவும் தெரிந்தன.   

ஆனால் தற்போது அரசாங்கம் முன்னெடுத்தும் வரும்  நல்லிணக்கச் செயற்திட்டங்களுக்கு  மத்தியில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனின்  இனவாதமானது    சந்தர்ப்பவாத  அரசியல் லாபத்தை ஈட்டிக்கொள்வதற்கான செயற்பாடாகவே உள்ளது. அவரின் கருத்துக்கள் அவ்வாறே அமைந்துள்ளன. 

எவ்வாறாயினும் அவர் சிரேஷ்ட நீதியரசர், சட்ட வல்லுனர் என்றாலும் அரசியல் விவகாரங்களில் முதிர்ச்சியற்றவர் என்பதை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் தமக்கு அரசியல் முதிர்ச்சியோ அல்லது அரசியல் தொடர்பில்  நீண்ட அனுபவங்களோ இல்லை என்பதை உறுப்படுத்தியுள்ளார் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.