சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பசளைச் செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்வேறு தொழில்நுட்ப முறைமைகள் பயன்படுத்தப்பட்டு, தேசிய அளவில், பெரிமளவில் சேதனப் பசளை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அதனால், அவற்றின் பயன்பாடுகள் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தியதுடன், அதற்காக நிபுணத்துவ உதவிகளை வழங்குமாறு பசளைச் செயலணியின் உறுப்பினர்களுக்கு ஜனாதிபது அறிவுறுத்தினார்.

“சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமை காரணமாகவே, கடந்த போகத்தின் போது பல விவசாயிகள் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

இம்முறை அந்தக் குறைகளைத் தவிர்த்து, விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் ஊடாக விவசாயப் பெருமக்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறான அறிவுறுத்தல் வேலைத்திட்டங்களில் கலந்துகொள்வதற்கு சில அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது.

உரிய அதிகாரிகள் அனைவரும் இந்த வேலைத்திட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் விவசாயிகளின் வருமானம் குறைவதற்கு வழிசமைக்கக் கூடாது.

அது தொடர்பான நம்பிக்கையை விவசாயப் பெருமக்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்.

கடந்த காலங்களில் எதிர்கொண்ட வெற்றியளிக்காத அனுபவங்கள் காரணமாகவே, சேதனப் பசளை விவசாயத்துக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

தேசிய பசளை உற்பத்தியாளர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

உயர் தரத்திலான சிறந்த பசளைகளை உரிய காலத்துக்கு வழங்கி, தமது தொழிற்றுறையைக் கட்டியெழுப்பும் பொறுப்பு உரிய நிறுவனங்களுக்கு உள்ளது.

இரசாயனப் பசளை இறக்குமதிக்காக வெளிநாட்டவர்களுக்கு பல வருடங்களாகச் செலவளிக்கப்பட்ட பில்லியன் கணக்கான ரூபாய்கள் நிதி, தற்போது இந்தத் தொழிற்றுறையினருக்குக் கிடைக்கப்பெறுவதால் - புதிய தேசிய தொழிற்றுறை ஒன்று கட்டியெழுப்பப்படுகிறது.

இதன் மூலம், தேசிய தொழில் முயற்சியாளர்கள் மேலும் பலமடைவர் என்றும் ஜனாதிபதி கூறினார்.  

தவறான பிரசாரங்களுக்கு விவசாயிகள் உள்ளானதால், உயர் தரத்திலான பசளைகளை அவர்கள் பயன்படுத்தாத சந்தர்ப்பங்கள் பலவும் பதிவாகியுள்ளன.

நஞ்சற்ற உணவு வேளை ஒன்றை மக்களுக்கு வழங்கும் அரசாங்கத்தின் கொள்கைக்குத் தாங்கள் கட்டுப்பட்டிருப்பதாக, சேதனப் பசளை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கடந்த பெரும்போகத்தின் போது தமது நிறுவனங்கள் உற்பத்தி செய்த சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான அறுவடைகளைப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் தொடர்பான விவரங்களை, பசளை உற்பத்தியாளர்கள் புள்ளிவிவரங்களுடன் முன்வைத்தனர். 

வெற்றியீட்டிய பல உதாரணங்கள் காணப்படுகின்ற போதிலும், தோல்வியடைந்த சில சம்பவங்கள் மாத்திரமே ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரப்படுத்தப்படுகின்றன” என்பதை இந்த கூட்டத்தின் போது அதிகாரிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் விவசாயிகள், விவசாயத்துறை அதிகாரிகள், பசளை உற்பத்தி நிறுவனங்கள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கலாகக் குழுக்கள் உருவாக்கப்பட்டு - பசளை உற்பத்தி மற்றும் விநியோக வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்பதை இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்க்ஷ தெரிவித்தார். 

எனது செயலாளர் காமினி செனரத் அவர்கள் தலைமையிலான அரச அதிகாரிகள், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் பசளை உற்பத்தி நிறுவனங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.