மலையக அரசியல் வாதிகளும் கம்பெனிகளும்  கூட்டாக இணைந்து  தமது சுய இலாபங்களுக்காக கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்திருக்கின்றனர் மலையக சமூக ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை  சக்திவேல் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனக் கூறி மலையக பெருந்தோட்ட தொழிலாளர் தோழமை அமைப்பினர் இன்றைய தினம் கொழும்பு ஐந்து இராம  சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அருட்தந்தை,

 தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை  கடந்த பல தசாப்த காலமாக நடைபெற்று வருகின்ற போதும்  இன்று வரை தொழிலாளர்கள் எதிர்பார்த்த 1000 ரூபா சம்பள உயர்வென்பது வெறும் கானல் நீராகவே  உள்ளது.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 31 ம் திகதி இறுதி  கூட்டு ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. 

குறித்த கூட்டு ஒப்பந்தம் 2015 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நிறைவடைந்திருக்கின்றது. இவ்வாறு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தலைவர்களுக்கு 2 வருடங்களில் குறித்த ஒப்பந்தம் காலாவதியாகும் என நன்றாகவே தெரியும.

பேச்சுவார்த்தை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும் .

 குறித்த ஒப்பந்தம் 6 மாதங்களுக்கு முன்பே புதுப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும் .  ஆனால் சில மலையக அரசியல் வாதிகள் , கம்பெனிகள் கூட்டாக இணைந்து  தமது சுய இலாபங்களுக்காக குறித்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்திருக்கின்றனர்.