(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை தாயார் சித்திரவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணின் விளக்கமறியலானது யாழ்.நீதிவான் நீதிமன்றால் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை அவரது தாயார் மிக மோசமாக அடித்து சித்திரவதை செய்வதை போன்ற வீடியோ ஒளிப்பதிவானது அயல்வீட்டாளரால் எடுக்கப்பட்டு சமூக வளைத்தளங்களில் பரவியிருந்தது. இதனையடுத்து இது தொடர்பாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையடுத்து குறித்த தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் அவருக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்ததுடன் அதில் அவரை விளக்கமறியலில் வைக்கவும் குறித்த வீடியோ ஒளிப்பதிவை மொறட்டுவ பல்கலைகழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்வும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வழக்கு விசாரனையின் போது மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி பெ.மோகனதாஸ் குறித்த தாயின் பிள்ளைகளை தொடர்ச்சியாக சிறுவர் காப்பகத்தில் வைத்து வளர்ப்பதே பொருத்தமானது என தெரிவித்திருந்தார்.

மேலும் ஆய்வுக்கு அனுப்பட்ட ஒளிப்பதிவு தொடர்பான அறிக்கைகள் பூர்த்தியாக்கப்ட்டிருக்காத நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் சிறுவர்களை சிறுவர் காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும் நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.