(எம்.சி.நஜிமுதீன்)

மக்களின் நிதியினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர் சூட்டப்படுவதனை தடுக்க வேண்டும். எனவே அதனை நடைமுறைப்படுததுவதற்கு பிரேரனை ஒன்றை விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முதியோர் தினத்தை முன்னிட்டு அகுனுகொளபிலஸ்ஸ தலாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச கட்டிடம்,  பாதைகள், பாடசாலைகள் உட்பட பல பொது இடங்களுக்கு அரசியல்வாதிகள் தமது பெயரை சூட்டிக்கொள்கின்றனர். தன்னுடைய பெயரில் அபிவிருத்தி திட்டங்கள் இல்லாதவிடத்து தமது அரசியல் வாழ்வில் பெரும் குறையுள்ளதாகக் கருதுகின்றனர். 

எனினும் அது பிற்போக்கான சிந்தனையாகும். ஏனெனில் மக்களின் சேவகர்களான அரசியல்வாதிகள் உரிய சேவையினை வழங்க வேண்டும். அதனை அவிடுத்து பொது மக்களின் நிதியினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கு தமது பெயரை சூடிக்கொள்ள முனையக்கூடாது.

எமது நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இது வரையில் எந்தவொரு அரசியல்வாதியும் தமது சொந்த நிதியினை செலவிட்டு மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதில்லை. அரசாங்கத்தின் நிதியொதுக்கீடு , வெளிநாடுகளிலிருந்து வட்டிக்கு  பெறப்பட்ட கடன் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றே அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றனர். இருந்தபோதும் வட்டிக்கு பெறப்படும் கடன் சுமை மக்கள்மீதே திணிக்கப்படுகிறது. எனினும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மாத்திரம் அரசியல்வாதிகள் தங்களது பெயர்களை சூடிக்கொள்கின்றனர்.

எனவே எதிர்காலத்தில் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொது மக்களின் நிதியினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கபடும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர் சூட்டப்படுவதனை தடைசெய்வதற்கான பிரேரனை ஒன்றை விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளேன்.

எனினும் நாட்டுக்காக பாரிய சேவையாற்றி உயிர்நீத்த சிரேஷ்ட அரசியல்வாதிகளின் பெயர் சூட்டப்டுவதில் தவறில்லை. அவ்வாறான நடவடிக்கை உலக நாடுகளில் புழக்கத்தில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.