(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் மக்கள் நிலைப்பாட்டை அறிய பன்னாடுகளும் ஆர்வமாக உள்ள நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வலியுறுத்தல்கள் சர்வதேச ரீதியில் இருந்துவர ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார , உடம்பில் தண்ணீர் படாமல் நீச்சலடிக்க முடியாது . அதே போன்று வருட இறுதிக்குள் தேர்தலை வைத்தே ஆக வேண்டிய நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

கூட்டம் நடத்துவதற்கு மைதானங்கள் கூட அரசாங்கம் வழங்காது பல்வேறு தடைகளை ஏற்படுத்துகின்றது. எவ்வாறாயினும் அரசாங்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. 

ஜனநாயகம் தொடர்பாக செயற்படும் சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் இலங்கையின் மக்கள் ஆணையை அறிய விரும்புகின்றன. 

இதற்காக அரசாங்கத்திற்கு தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களையும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

எனவே என்ன கூட்டு ஆடினாலும் ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும். 

உடம்பில் தண்ணீர் படாமல் நீச்சலடிக்க முடியாததை போன்று தேர்தலை நடத்தாது மக்கள் ஆணையை மதிப்பிட முடியாது என குறிப்பிட்டார். 

பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்~வின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.