( எம்.எப்.எம்.பஸீர்)
களனி பல்கலைக்கழகம், ராகம வைத்திய பீடத்தின் ஆண் மாணவர்களின் தங்குவிடுதிக்குள் குழுவொன்று அத்துமீறி நுழைந்து நடாத்திய தாக்குதலில் 04 மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (2) அதிகாலை 1.30 மணியளவில் பொலிஸாருக்கு முதல் தகவல் கிடைக்கப் பெற்றதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்நிலையில் காயமடைந்த மாணவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்ததுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் மாணவன் இந்த தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர் என குறிப்பிட்டார்.
அம்மாணவனுக்கு மேலதிகமாக மற்றொரு சந்தேக நபரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இன்று மாலையாகும் போதும் சம்பவம் தொடர்பில் 6 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் இரு குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ராகம வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் 3 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கிய சில ஆலோசனைகளை அடுத்து 4 ஆம் ஆண்டு மாணவர்கள் மீது விடுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட கருத்து மோதல் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பொலிஸ் தரப்பு கூறுகிறது.
இந்த முரண்பாட்டினால் கோபமடைந்துள்ள இரஜாங்க அமைச்சர் அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் நெருங்கிய ஆதரவாளரான 3 ஆம் ஆண்டு மாணவர் ஒருவர், அவ்வமைச்சரின் சகாக்களுடன் விடுதிக்குள் அத்து மீறி நுழைந்து இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் ராகம மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் இன்று விஷேட அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டனர்.
நேற்று இரவு 11.30 மணிக்கும் 12.30 மணிக்கும் இடையே இரு மோட்டார் வாகனங்களில் வந்த சந்தேக நபர்கள் விடுதிக்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
' அதில் ஒரு வாகனமும் அதன் சாரதியும் பல்கலை மாணவர்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வாகனம் அரச நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது. இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரும் தகுதி தராதிரம் இன்றி கைது செய்யப்படுவர் ' என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன விசாரணையின் நிலைமை குறித்து விளக்கினார்.
அத்துடன் கைதான சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன், 5 பேருக்கு மேற்பட்டோர் தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ள நிலையில் சட்ட விரோத கும்பலொன்றின் உறுப்பினராக இருந்தமை தொடர்பில் அனைவருக்கும் எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என குறிப்பிட்டார்.
' இந்த தாக்குதலுக்கு 5க்கும் மேற்பட்டோர் வந்துள்ளதாக தெரிகிறது. எனவே சட்ட விரோத கும்பலொன்றின் உறுப்பினராக இருந்தமை, தாக்குதல் நடாத்தி காயம் ஏற்படுத்தியமை, பலத்காரமாக உள் நுழைந்தமை, அரசாங்க சொத்து துஷ்பிரயோகம் போன்ற தண்டனை சட்டக் கோவையின் கீழ் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்படும் ' என அஜித் ரோஹன கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்படும் போது, அவற்றை பலகலைக்கழக மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளதாகவும் அவற்றை பொலிசார் சேகரித்து 1995 ஆம் ஆண்டின் 94 ஆம் இலக்க சாட்சிகள் கட்டளை சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் சாட்சியாக பயன்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் ஆதர்வாளர்கள் இருக்கும் நிலையில், விசாரணைகள் தொடர்பில் களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். எவ்வாறாயினும் தாக்குதலின் பின்னணியில் யார் இருப்பினும் தகுதி தராதரம் பாராது நடவடிக்கைஎ டுக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கும், பொலிஸ் மா அதிபர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் விஷேட உத்தரவுகளை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM