(நா.தனுஜா)

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் 14.2 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றது. இப்பணவீக்கமானது கடந்த டிசம்பர் மாதத்தில் 12.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது ஜனவரி மாதத்தில் 2.1 சதவீத அதிகரிப்பைக் காண்பித்திருக்கின்றது.

கடந்த ஒரு மாதகாலத்தில் அரிசி, பால்மா, பாண் போன்ற உணவுப்பொருட்கள் மற்றும் போக்குவரத்து, நீர், மின்சாரம், எரிவாயு போன்ற உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இப்பணவீக்க உயர்விற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியில் நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 14 சதவீதமாகப் பதிவாகியிருந்ததுடன், கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இம்முறையில் கணிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் முதல்முறையாக இரட்டை இலக்கங்களில் (11.1) பதிவாகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலும் பணவீக்கமானது 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரி மாதம் குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. 

இப்பணவீக்கம் பெரும்பாலும் வழங்கலுடன் தொடர்புடைய காரணிகளாலேயே தூண்டப்பட்டிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் மாதாந்த விலையதிகரிப்பே பணவீக்கம் உயர்வடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, கடந்த டிசம்பர் மாதம் 22.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப்பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 25 சதவீதமாக அதிகரித்ததாகவும் டிசம்பரில் 7.5 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் ஜனவரியில் 9.2 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

அரிசி, பழங்கள், பால்மா, பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகளில் கடந்த மாதம் குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டதாகவும் உணவல்லாப்பொருட்களைப் பொறுத்தமட்டில் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றத்தினால் போக்குவரத்துக்கட்டணம் அதிகரித்ததுடன் நீர், மின்சாரம், கல்வி, உணவகங்கள் மற்றும் ஹோட்டல்சேவை ஆகியவற்றுக்கான கட்டணங்களும் உயர்வடைந்ததாகவும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளைப் பொறுத்தமட்டில், அவற்றில் முறையே 1.15 சதவீதம் மற்றும் 1.28 சதவீதம் என்ற அடிப்படையிலேற்பட்ட அதிகரிப்பின் காரணமாக கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.43 சதவீதமாகப் பதிவானது.