(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலைப்பாட்டில் உள்ளது. 

தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகளுடன் நிபந்தனையின் அடிப்படையில் கூட்டணியமைக்கப்படும்.

மாகாண சபை தேர்தல் குறித்து பாராளுமன்ற மட்டத்தில் வெகுவிரைவில் ஒரு தீர்வு எட்டப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு கட்சி என்ற ரீதியில் எந்நிலையிலும் தயாராகவே உள்ளோம்.

மாகாணசபை தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு தீர்வு காணாது தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை திட்டமிட்ட வகையில் பிற்போட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலைப்பாட்டில் உள்ளது.

சுதந்திர கட்சியை தனித்து ஏனைய அரசியல் கட்சிகளுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் கூட்டணியில் ஒன்றினையலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் விருப்பு வாக்கினை அதிகரித்துக் கொள்வதற்காக அரசாங்கத்தின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும்.சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் எமது அரசியல் வெற்றிக்கு தடையாக அமையாது என்றார்.