தடுப்பூசி வழங்க தாமதித்தமையே 15 ஆயிரம் உயிர்கள் பலியாவதற்கு காரணம் - ராஜித

By T. Saranya

01 Feb, 2022 | 04:42 PM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் பலரும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தைப் பாராட்டி கருத்துக்களை வெளியிட்டுவருவதை அவதானிக்கமுடிகின்றது. 

ஆனால் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை ஆரம்பிக்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த போதிலும், அரசாங்கம் அதனைத் தாமதப்படுத்தியதன் விளைவாகவே இன்றளவிலே கொரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் 15,000 உயிர்கள் பலியாகியிருக்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாடளாவிய ரீதியில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துவருகின்றது. அதேவேளை பலரும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தைப் பாராட்டி கருத்துக்களை வெளியிட்டுவருவதை அவதானிக்கமுடிகின்றது. 

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் சர்வதேச நாடுகள் தமது மக்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசியை வழங்க ஆரம்பித்த சந்தர்ப்பத்தில், எமது நாட்டுமக்களுக்கும் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம்.

இருப்பினும் அப்போது பாணி மருந்தை வழங்குவதிலும் ஆற்றில் சில திரவியங்களைக் கரைப்பதிலுமே அரசாங்கம் கவனம் செலுத்திவந்தது. அதன் தொடர்ச்சியாகத் தடுப்பூசி வழங்கலை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் தாமதப்படுத்தியதன் விளைவாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பெரும் எண்ணிக்கையானோர் பலியானார்கள். 

அக்காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் சுமார் 15,000 பேர்வரையில் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

அதேபோன்று ஏனைய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்தபோது, எமது நாட்டில் விமானநிலையங்களை முழுமையாக மூடுமாறு நாங்கள் வலியுறுத்தினோம். அதனையும் அரசாங்கம் செவிமடுக்கவில்லை. 

தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டை முடக்குவதற்கான தீர்மானமும் அரசாங்கத்தினால் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உரியகாலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தால், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்களைக் கணிசமானளவால் குறைத்துக்கொண்டிருக்கமுடியும்.

அதுமாத்திரமன்றி தடுப்பூசி கொள்வனவில் அரசாங்கம் பாரிய நிதிமோசடியிலும் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக 7 அமெரிக்க டொலருக்குக் கொள்வனவு செய்யக்கூடிய தடுப்பூசி 15 அமெரிக்க டொலருக்குக் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதுடன் அதன்மூலம் சுமார் 3.2 பில்லியன் ரூபா நிதிமோசடி இடம்பெற்றிருக்கின்றது. 

தற்போதைய அரசாங்கம் மிகச்சொற்பகாலமே ஆட்சிபீடத்தில் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கும் அதன் உறுப்பினர்கள், இயலுமானவரை தாம் இலாபமடையவேண்டும் என்ற நோக்கில் இவ்வாறான பாரிய நிதிமோசடிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right