(ஜெ.அனோஜன்)

நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோருக்கு குறைந்த விலையில் தேங்காய்களை வழங்குவதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும், தென்னை ஆராய்ச்சி நிறுவனமும் வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டன.

அந்த ஒப்பந்தத்திற்கு இணங்க லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக நுகர்வோர் இந்த வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிலையான விலையில் தேங்காய்களை பெற்றுக்கொள்ள முடியும்.

May be an image of indoor

இந்த ஒப்பந்தத்தில் லங்கா சதொச சார்பில் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சாரங்க அழகப்பெரும ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

May be an image of 4 people, people standing and indoor

இந்நிகழ்வில் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன, வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரராணி ஜயவர்தன, லங்கா சதொச தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் ஜி.ரூபசிங்க, தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சாரங்க அழகப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர். 

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன,

May be an image of 2 people and people standing

புதிய ஒப்பந்தத்திற்கு இணங்க லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக நுகர்வோர் இந்த வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிலையான விலையில் தேங்காய்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்படி முன்னோடித் திட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சந்தையில் தேங்காயின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது, லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் விலைகளும் எதிர்காலத்தில் குறையும்.

எனினும் தேங்காயின் விலை சந்தையில் அதிகரித்தாலும், சதொச விற்பனை நிலையத்தில் 75 ரூபா என்ற நிர்ணய விலையிலேயே தேங்காயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன, 

தற்போது தென்னை மற்றும் தென்னை சார்ந்த பொருட்களுக்கான தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின்படி, தென்னை தொடர்பான பொருட்களில் இருந்து ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டவும், உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான பொருட்களை சந்தைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.