(இராஜதுரை ஹஷான்)

காணாமலாக்கப்பட்டோரது விவகாரத்திற்கு தீர்வு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு முழுமையாக உள்ளது.நாம் வாக்குறுதி வழங்கவில்லை என ஒருபோதும் தட்டிக்கழிக்க முடியாது.

உத்தேச அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் பெறும் என்பதை தனிப்பட்ட முறையில் இதுவரையில் நம்பவில்லை என லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

உத்தேச அரசியலமைப்பு உருவாக்கம்,காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்த சுவடுகளை நட்டஈட்டால் மாத்திரம் ஈடுசெய்ய முடியாது.இறுதிக்கட்ட யுத்தத்திலும்,அதற்கு முற்பட்ட காலத்திலும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் காலம் காலமாக பேசப்பட்டு வருகிறதே தவிர இறுதி தீர்மானம் இதுவரையில் காணப்படவில்லை.

காணாமலாக்கபட்டோரது உறவினர்கள் பல ஆண்டு காலமாக நீதி கோரி போராட்டத்தில் ஈடுப்படுவது கவலைக்குரியது.

காணாமலாக்கபட்ட உறவுகளுக்கு நேர்ந்தது  என்ன என்பதை தெரிந்துக் கொள்ளும் முழு உரிமையும் அவர்களின் உறவினர்களுக்கு உண்டு.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் ஆரோக்கியமான முன்னேற்றம் காணப்பட்டது என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வகட்சி குழு மாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்தியிருந்தால் யுத்தத்தை அடிப்படையாக்க கொண்டு தோற்றம் பெற்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றிருக்க முடியும்.

குhணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தீர்வு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.நாம் வாக்குறுதி வழங்கவில்லை என ஒருபோதும் தட்டிக்கழிக்க முடியாது.காணாமலாக்கபட்டோரது உறவினர்கள் அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை முழுமையாக எதிர்பார்க்கிறார்கள்.

தற்போதைய நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் உத்தேச புதிய அரசியலமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் பெறும் என்பதை தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொள்ள முடியவில்லை.ஏனெனில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிமுறை ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கோணத்தில் பார்க்கப்படுகிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து இன மக்களையும் ஒன்றினைத்து பெர்து கொள்கைக்கமைய விரிவுப்படுத்தப்பட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான சூழல் தற்போது காணப்படவில்லை என்பதை உண்மை என்றார்.