சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், பாராளுமன்றத்தில் இதுவரை 11 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சபாநாயகருக்கு நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுவாரென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சபாநாயகருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

இவர்களைவிட அமைச்சர் சரத்வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக பண்டார கொட்டேகொட, சரதி துஷயந்த மித்திரபால, சாணக்கியன் இராசமாணிக்கம், ரோஹிணி கவிரத்ன, அமரகீர்த்தி அத்துகோரள, கோகில குணவர்தன ஆகியோர் கொவிட் தொற்றுக்குள்ளாகினர்.

இதேவேளை, அமைச்சர்களான ஜயந்த சமரவீர மற்றும் திலும் அமுனுகம ஆகியோரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.