(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் காலி மற்றும் கொழும்பு அணிகள் தங்களது இரண்டாவது வெற்றியை ஈட்டிக்கொண்டன. 

இதுவரையிலும் ஒரு போட்டியில் கூட வெற்றியீட்டாத தம்புள்ளை அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.

கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெற்ற  5 ஆவது லீக் போட்டியில் தம்புள்ளை அணியை எதிர்த்தாடிய காலி அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட  50 ஓவர்களில்,49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165  ஓட்டங்களை குவித்தது. 107 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள் இழந்திருந்த தம்புள்ளை அணிக்கு கடைசி விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த லக்சான் சந்தகேன் , விஷ்வ பெர்னாண்டோ இருவரும் தமக்கிடையில் பெறுமதிமிக்க   66 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர். 

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கிய பவான் ரத்நாயக்க 44 ஓட்டங்களையும்,  லக்சான் சந்தகேன் 34 ஓட்டங்களையும், துஷான் ஹேமன்த்த 25 ஓட்டங்களையும், விஷ்வ பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் ஹேஷான் ஹெட்டியாராச்சி, லக்சான் தனஞ்சய இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், முதித்த லக்சான் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய காலி அணி  34.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட்டுக்களால் வென்றது.  அஷான் ரந்திக்க 49 ஓட்டங்களையும், முதித்த லக்சான் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும், தனஞ்சய லக்சான் 32 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 3 விக்கெட்டுக்களையும்,  அஷான்  பிரியன்ஜன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.

இதேவேளை, இன்றைய தினம் நடைபெற்ற மற்றுமொரு லீக் போட்டியில் கண்டி அணிக்கெதிரான போட்டியில் கொழும்பு அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியை பதிவு செய்தது. கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில்  சஹான்  ஆராச்சிகே (86) , புலின தரங்க (36), அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் (35), லசித் குரூஸ்புள்ளே (33) ஆகியோர் பிரகாசித்தனர். 

பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க 4 விக்கெட்டுக்களையும், கலன பெரேரா 3 விக்கெட்டுக்களையும்  தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி  48.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களை  பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றி ஈட்டியது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர்  திமுத் கருணாரட்ண (59) , நுவனிந்து பெர்னாண்டோ (67), நிப்புன் தனஞ்சய (70 ஆ.இ) அரைச் சதங்களை  அடித்திருந்ததுடன்,  சித்தார கிம்ஹான் 37 ஓட்டங்களையும், அஷேன் பண்டார ஆட்டமிழக்காது அதிரடியாக 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினர். 

இதில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த நுவனிந்து பெர்னாண்டோ, நிப்புன் தனஞ்சய ஜோடி  தமக்கிடையில் 111 ஓட்டங்களை பகிர்ந்திருந்தமை விசேட அம்சமாகும்.

பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களையும், திக்சில டி சில்வா, சஹான் ஆராக்கிகே இருவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

போட்டிச் சுருக்கம்

தம்புள்ளை எதிர் காலி

தம்புள்ளை அணி 49.3 ஓவர்களில் 165/10

காலி அணி   29.3 ஓவர்களில்  166/7

காலி அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

போட்டிச் சுருக்கம்

கண்டி எதிர் கொழும்பு

கண்டி அணி 50 ஓவர்களில் 271/10

கொழும்பு அணி 48.1ஓவர்களில் 274/4 

கொழும்பு அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி