(எம்.எம்.சில்வெஸ்டர்)

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் வேர்ல்ட் ஜயண்டஸ் அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடிய  இந்தியா மஹராஜாஸ் அணி 5 ‍ ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியதால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு நழுவிப்போனது. 

இதனால் 2 போட்டிகளில் வெற்றியீட்டி 4 புள்ளிகளைப் பெற்றிருந்த ஏஷியா லயன்ஸ் அணி வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணியுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஓமானின் மஸ்கட் நகரில் கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று ஆரம்பமான லெஜெண்ட் லீக் கிரிக்கெட் தொடரில் ஏஷியா லயன்ஸ், இந்தியா மஹராஜாஸ், வேர்ல்ட் ஜயண்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்றன. 

லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வேர்ல்ட் ஜயண்டஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது. 

துடுப்பாட்டத்தில் ஹேர்ஷல் கிப்ஸ் 57 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கலாக  46 பந்துகளில் 89 ஓட்டங்களை குவித்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா மஹராஜாஸ் 223 ஓட்டங்களை பெற்று 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 

அவ்வணி சார்பில் துடுப்பாட்டத்தில் நாமன் ஓஜா  51 பந்துகளில் 95 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும் இந்தியா மஹராஜாஸ் அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.

இறுதி ஓவரில் 8 ஓட்டங்களை கட்டுப்படுத்தவதுற்காக வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணிக்காக கடைசி ஓவரை வீசிய பிரெட் லீ ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய 2 ஓட்டங்களை மாத்திமே விட்டுக்கொடுத்து இந்தியா மஹராஜாஸ் அணியின் வெற்றியை பறித்தெடுத்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றது. 

ஏஷியா லயன்ஸ் அணி  4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்று இறுதிப்  போட்டிக்குத் தகுதி பெற்றன. 

இந்தியா மஹராஜாஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றீயீட்டி 2 புள்ளிகளை மாத்திரம் பெற்று தொடரிலிருந்து வெளியேறியது.

லெஜெண்ட் லீக் கிரிக்கெட் தொடரின் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நாளை மாலை இலங்‍கை நேரப்படி 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.