(ஜெ.அனோஜன்)

ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆண்களுக்கான உலக கிண்ண போட்டியின் காலியிறுதியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Image

ஆன்டிகுவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 47.1 ஓவர்களில் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அப்துல் ஹாதி 37 ஓட்டங்களையும், நூர் அஹகமட் 30 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் டக்கவுட்டுடனும் குறைந்த ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வினுஜா ரன்புல் 10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அணித் தலைவர் துனித் வெல்லலகே 3 விக்கெட்டுகளையும், டிரெவின் மெத்யூ மற்றும் யாசிரு ரொட்ரிகோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 135 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துப்பரிமாற்றம் மற்றும் களத்தடுப்பில் திக்குமுக்காடி 46 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணித் தலைவர் துனித் வெல்லலகே மாத்திரம் அதிகபடியாக 34 ஓட்டங்களை எடுத்தார். ஏனைய வீரர்கள் சொல்லும் அளவுக்கு பிரகாசிக்கவில்லை.

ரன் அவுட் முறையில் மாத்திரம் இலங்கை அணியின் நான்கு விக்கெட்டுகள் சரிந்தமை கவலைக்குரிய விடயமாகும்.

எவ்வாறெனினும் இறுதியில் 4 ஓட்டங்களினால் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆண்களுக்கான உலக கிண்ண போட்டியின் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது.

செவ்வாய்கிழமை நடைபெறும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் இலங்கை திங்கட்கிழமை தென்னாபிரிகாவுக்கு எதிராக பிளேஆஃப் அரையிறுதியில் மோதும்.