நாட்டுக்கும் மக்களுக்கும் நலன் வேண்டி ஜய பிரித் பாராயணம்

Published By: Vishnu

27 Jan, 2022 | 02:12 PM
image

நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன் வேண்டி, பாதுகாப்பு அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் "ஜய பிரித் பாராயணம்" புண்ணிய நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றது.

May be an image of 2 people and indoor

மஹாநாயக்கர்கள், மற்றும் அனுநாயக்கத் தேரர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்த ஆயிரம் பிக்குமார்களின் பங்குபற்றுதலுடன், இந்த ஜய பிரித் பாராயணம் இடம்பெற்றது.

May be an image of 5 people and indoor

May be an image of 7 people, people standing and indoor

உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள், அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் முப்படையினருக்கு ஆசி வேண்டியும், இந்த ஜய பிரித் பாராயணம் செய்வது வழமையாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலத்தில், 3,000 - 5,000 பிக்குமார்களின் பங்குபற்றுதலுடன் முதலாவது “ஜய பிரித் பாராயணம்” புண்ணிய நிகழ்வு நடத்தப்பட்டது. 

May be an image of 9 people, people standing, people walking and outdoors

நிலவும் கொவிட் தொற்றுப் பரவலைக் கருத்திற்கொண்டே, இம்முறை பிரித் பாராயணத்துக்கு ஆயிரம் மஹா சங்கத்தினர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டது என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

சதாதுக்க கரண்டுவ மற்றும் பிருவானா புண்ணிய நூல் என்பன, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரால் ஏந்தி வரப்பட்டன. பின்னர், சதாதுக்க கரண்டுவவை பொறுப்பேற்ற ஜனாதிபதி, அதனை பிரித் பாராயண மண்டபத்தில் வைத்து, நைவேத்தியம் படைத்து அதிஷ்டான பூஜைகளைச் செய்த பின்னர், ஜய பிரித் பாராயணத்துக்காக மஹா சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து அனுசாசனை நிகழ்த்திய மஹா சங்கத்தினர், கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்கவும் பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியம் மற்றும் உளநலன் பெறவும் பிராத்தனை செய்தனர். கடந்த இரண்டு வருடங்களில் உலக மக்கள் எதிர்கொண்ட சவாலான காலகட்டத்தை சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டின் எதிர்காலத்துக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் வெற்றியடைய உதவுவது அனைவரதும் பொறுப்பாகுமென்றும் வலியுறுத்தினர்.

மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய வேண்டருவே உபாலி தேரர், ராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்கர் அதி வணக்கத்துக்குரிய மக்குலேவே விமல தேரர், அமரபுர மஹா நிக்காயவின் அதிகௌரவ மஹா நாயக்கர் அதி வணக்கத்துக்குரிய தொடம்பஹல சந்தசிறி தேரர், பேராசிரியர் வணக்கத்துக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் ஆகியோர் அனுசாசனை நிகழ்த்தியதன் பின்னர், ஜய பிரித் பாராயணம் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று (27) காலை நடைபெற்ற தேரர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்விலும், ஜனாதிபதி கலந்துகொண்டார்.

May be an image of 6 people, people standing and indoor

ஜனாதிபதிச் செயலகம், உள்நாட்டலுவல்கள், பாதுகாப்பு, புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானி அலுவலகம், முப்படையினர், இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன, இப்புண்ணிய நிகழ்வுக்கான அனுசரணைகளை வழங்கியிருந்தன.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஆளுநர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவுகளின் உறுப்பினர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோரும், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்