வருமையான நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சீனா விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. 

சீனா கடன் கொடுத்த நாடுகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், அந்நாடுகளால் கடனை மீன செலுத்த முடியாத நிலையில் பெய்ஜிங்கின்  கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றன. 

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை சீனா நிராகரிக்கிறது. 

தங்கள் பிம்பத்தை சிதைக்கும் வகையில், மேற்குலக நாடுகளினால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக சீனா கூறுவதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கடன் வழங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். 

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான அதன் கடன்கள் கடந்த பத்தாண்டுகளில் சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 

இத்தொகையானது 2020ஆம் ஆண்டின் இறுதியில் 170 பில்லியன் டொலரை தொட்டடுள்ளது. 

ஆனால் சீனாவின் ஒட்டுமொத்த கடன்கள், இந்த புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

வளரும் நாடுகளுக்கு சீனா வழங்கும் பாதி கடன்கள் கடன் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்படவில்லை என அமெரிக்காவின் வில்லியம் ரூ மேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பின் எய்ட் டேட்டா ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.  

இது பெரும்பாலும் அரசாங்க குறிப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், வங்கிகள், கூட்டு முயற்சிகள் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு  சில தகவல்கள் மாற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 40 திற்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேலான கடன்களை சீனாவிடமிருந்து பெற்றுள்ளன. 

மறுப்புறம் ஜிபூட்டி, லாவோஸ், சாம்பியா மற்றும்  கிர்கிஸ்தான்  போன்ற நாடுகள், தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தை சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளன.

சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடனில் பெரும்பகுதியான கடன்கள், பட்டுப்பாதைய திட்டத்தின் கீழ் சாலைகள், புகையிரதம், துறைமுகங்கள், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறை சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனா மற்ற நாடுகளை தன் கைக்குள் வைத்திருக்க கடன் பொறிகளை பயன்படுத்துவதாக பிரிட்டனின் வெளிநாட்டு உளவு அமைப்பான எம் ஐ 6-ன் தலைவர் ரிச்சர்ட் மூர் பி.பி.சி.யுடனான நேர்காணல் ஒன்றின் பொது குறிப்பிட்டிருந்தார்.

சீனா மற்ற நாடுகளுக்குப் பணத்தைக் கடனாகக் வழங்குகின்றது.  அந்நாடுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத போது முக்கிய சொத்துக்களின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டியதாகிறது. இது சீனாவிற்கு எதிரான நீண்டகால குற்றச்சாட்டு என்றாலும் தொடர்ந்தும் சீனா  அதனை மறுத்து வருகிறது.

சீனாவை விமர்சிப்பவர்களால் அடிக்கடி குறிப்பிடும் ஓர் உதாரணம் இலங்கையாகும்.  

அதாவது சீன முதலீட்டுடனான ஹம்பந்தொட்டை துறைமுக திட்டத்தினால் ஏற்பட்ட கடன் நெருக்கடியும் மறுக்க முடியாததாகும்.  

சீன கடன்கள் மற்றும் சீன ஒப்பந்ததாரர்களைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கில் செலவழிக்கப்பட்ட திட்டமாகும். இ

லாபத்தை நிரூபிக்க முடியாமல் திணறி சர்ச்சையில் சிக்கியது இலங்கை. இறுதியாக, 2017 ஆம் ஆண்டில், மேற்கொண்டு சீனா முதலீடு செய்வதற்கு ஈடாக, துறைமுகத்தில் 70 வீத கட்டுப்பாட்டை சீனாவிற்கு  99 ஆண்டு குத்தகைக்கு வழங்க இலங்கை ஒப்புக்கொண்டது.

ஆனால் இந்த ஒப்பந்தம் உள்ளூர் அரசியல் உள்நோக்கங்களால் உந்தப்பட்டது என்றும், சீனா ஒருபோதும் துறைமுகத்தின் முறையான உரிமையைப் பெறவில்லை என்றும்  பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சாதம் ஹவுஸ் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையின் ஒட்டுமொத்த கடனில் பெரும்பகுதி கடன் சீனாவிடமிருந்து பெறப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.