சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க  ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது 15 பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான 85 வயதை உடைய சுலைமான் செய்யது புஹாரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் என சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மூதாட்டி குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், சம்பவதினமான இன்று காலையில் அவரது நான்காவது மகன் வழமைபோல காலை உணவை தாயாருக்கு கொண்டு சென்றபோது தயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போதே மூதாட்டி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.