( எம்.எப்.எம்.பஸீர்)
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல புனிதர்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற வைத்தியர் இன்று ( 26) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இன்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இது குறித்த விவகாரத்தில், நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அமைய, சந்தேக நபரான தொன் சார்லி தயாரத்ன ஹேரத் எனும் குறித்த வைத்தியருக்கு குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய வாக்கு மூலம் ஒன்றினை வழங்க அவசியமாவதாக தெரிவிப்பதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
அதன்படியே இன்று பி.ப. 2.00 மணி முதல் 3.45 மணி வரை குறித்த வைத்தியர் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இந்த இரகசிய வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் 13 வயதான சிறுவன் ஒருவரும் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன் எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பணாமுர பகுதியில் அன்னதான வீடொன்றில் வைத்து, அரச உளவுச் சேவையின் தகவலுக்கு அமைய கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவினர் கடந்த 15 ஆம் திகதி மாலை கைது செய்த கம்பஹா - கடவத்தை - மங்கட வீதி பகுதியைச் சேர்ந்த லியனகே தயாசேன எனும் சந்தேக நபரும் இரகசிய வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இவ்வாறான பின்னனியிலேயே தற்போது குறித்த வைத்தியரும் நீதிவானிடம் இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தேவாலய குண்டு விவகாரத்தில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் தடுப்புக் காவலில் பொலிஸார் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.