(இராஜதுரை ஹஷான்)

புகையிரத திணைக்களத்தின் செயற்பாடுகள் நாட்டின் புகையிரத சேவையினை சர்வதேச மட்டத்தில் மலினப்படுத்தியுள்ளது. தூர பிரதேச புகையிரத சேவைகள் முன்னறிவித்தலின்றிய வகையில் தொடர்ந்து பிற்போடப்படுவதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு புகையிரத திணைக்களம் தீர்வு வழங்காவிடின் மீண்டும் பாரிய தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் கடந்த காலங்களில் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து புகையிரத திணைக்களம் அவதானம் செலுத்தாமல் தன்னிச்சையாக செயற்படுகிறது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி செல்வதற்கு தயாராகவிருந்த கடுகதி புகையிரத சேவை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட தேசிய சுற்றுலா பயணிகளும் இதனால் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர்.

கல்கிசை – காங்கேசன்துறை வரையிலான அதிசொகுசு புகையிரம் நாளாந்தம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது. இப்புகையிரத சேவை தற்போது திட்டமிடப்பட்ட வகையில் தாமதப்படுத்தப்படுகிறது.கல்கிசையில் இருந்து ஆரம்பிப்பதற்கு பதிலாக தற்போது கொழும்பு கோட்டையில் இருந்து அப்புகையிரதம் காங்கேசன்துறை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறது.

புகையிரத சேவையில் நிலவும் கனிஷ்ட சேவையாளர்களின் வெற்றிட பிரச்சினைக்கு தீர்வு காண புகையிரத திணைக்களம் எவ்வித நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை.பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து புதிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

புகையிரத சேவையில் நிலவும் குறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதை புகையிரத திணைக்களம் தொடர்ந்து தட்டிக்கழித்து வருகிறது.பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிடின் எதிர்வரும் நாட்களில் மீண்டும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படுவோம் என்றார்.