(இராஜதுரை ஹஷான்)

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை  மேம்படுத்தும் வகையில் காலி துறைமுகம், சுற்றுலாத்துறை துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும். சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டம் 2024ஆம் ஆண்டுக்குள் பூரணப்படுத்தப்படும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அடுத்த வாரத்திலிருந்து மக்கள் ஆதரவு வேட்டை ஆரம்பம் : ரோஹித அபேகுணவர்தன |  Virakesari.lk

காலி துறைமுகத்தை சுற்றுலாத்துறை துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஒன்றினைத்து இன்று கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த இரண்டு வருடகாலமாக கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.துறைமுக அபிவிருத்தி துறை ஏனைய துறைகளை காட்டிலும் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்துள்ளது.

துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி குறித்து சுபீட்சமான கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படும்.கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் காலி துறைமுகம் சுற்றுலாத்துறை துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் கொழும்பு துறைமுக நகரத்தை போன்று 40 ஹேக்டயரால் நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு சுற்றுலாத்துறை தளமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.