( எம்.எப்.எம்.பஸீர்)

தெற்கு  சர்வதேச கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட  340 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 343 கிலோ 456 கிராம் நிறைக் கொண்ட  ஹெரோயின் தொகை தொடர்பில் இதுவரை 17 சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் இன்று ( 26) கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அவர்களை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பில் தடுப்பில் வைத்து விசாரிக்க  உத்தரவிடப்பட்டது.

 இன்றைய தினம் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள், குறித்த சந்தேக நபர்கள் போதைப் பொருட்களுக்கு மேலதிகமாக ஆயுதங்களையும் நாட்டுக்குள் கடத்தியுள்ளதாக தகவல்கள் உள்ள நிலையில், அது தொடர்பில் நீண்ட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். இந் நிலையிலேயே பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் சந்தேக நபர்களை இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்தது.

இன்று சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்த போது, சந்தேக நபர்களில் உள்ளடங்கும் படகொன்றின் உரிமையாளர் ஒருவர், தனக்கு அஞ்சு எனும் பெயரிலான நபர் ஒருவர் தொலைபேசியில் கதைத்து குறித்த போதைப் பொருளை எடுத்துவருமாறு அச்சுறுத்தியதாக திறந்த மன்றில் தெரிவித்தார்.

 இந்த நிலையிலேயே இவ்வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களுடன் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு  பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.யு. ஜயசிங்கவின் மேற்பார்வையில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த ஜயசேகரவின் கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின்  ஆலோசனைக்கு அமைய  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ்  பரிசோதகர் லலித் ஜயசேகர தலைமையிலான  தனிப்படை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.