(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் கொழும்பு  7 விக்கெட்டுக்களாலும், கண்டி அணியும்  6 விக்கெட்டுக்களாலும் வெற்றியை பதிவு செய்தன.

கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய தம்புள்ளை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 40 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக  லசித் அபேரட்ண 41 ஓட்டங்களையும், அஷான் பிரியன்ஜன் 31 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக  பெற்றுக்கொடுத்தனர். 

பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும், கலன பெரேரா, சரித் அசலங்க தலா 2 விக்கெட்டுக்களை  கைப்பற்றியிருந்ததுடன், ஷம்மு அஷான், கவிந்து நதீஷான் இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி  20.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ்  44 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பெளண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களையும், சரித் அசலங்க 46 பந்துகளில் 8 பெளண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நுவன் துஷார, அஷான் பிரியன்ஜன், லக்சான் சந்தகான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை, இன்றைய தினம் நடைபெற்ற மற்றுமொரு லீக் போட்டியில் யாழ்ப்பாண அணியை கண்டி அணி எதிர்த்தாடியது. கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி 50 ஓவர்கள் நிறைவில்  8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 246 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன அரைச் சதம் (56) அடித்ததுடன், சந்தூஷ் குணதிலக்க( 45) மற்றும்  அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை குழாமில் புதுமுக வீரரான இணைக்கப்பட்டுள்ள ஜனித் லியனகே (41) தொடரின்  மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர். 

பந்துவீச்சில் நிப்புன் ரன்சிக்க 3 விக்கெட்டுக்களையும்  அசித்த பெர்ணான்டோ , புலின தரங்க இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

247 ஓட்டங்களை நோக்கி வெற்றிக்காக துடுப்பெடுத்தாடிய கண்டி அணி  39.4  ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் நிரோஷன் திக்வெல்ல 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 7 பெளண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை  விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இவரைத் தவிர, கண்டி அணியின் தலைவரான கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்கமால்  57 ஓட்டங்களை குவித்தார்.

பந்துவீச்சில் ஷிரான் பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும், நுவன் பிரதீப், ஜெப்ரி வெண்டசே இருவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.