(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகயை விமர்சிக்கும் சுதந்திர கட்சியினரின் செயற்பாடுகள் தொடர்பில் அவதானத்துடன் உள்ளோம்.

அரசியல் சூழ்ச்சியினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என நுண்கடன் மற்றும் சுயத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் சுதந்திர கட்சி கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளதே தவிர சுதந்திர கட்சி பிரதான கட்சியல்ல. சுதந்திர கட்சியை போன்று பல கட்சிகள் கூட்டணியில் ஒன்றினைந்து செயற்படுகின்றன.

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் உள்ளோம்.

இழந்துள்ள மக்கள் செல்வாக்கினை புதுப்பித்துக் கொள்வதற்காகவே சுதந்திர கட்சி பொது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கிறது.

அரசாங்கத்தின் கொள்கையுடன் இணங்க விருப்பமில்லாதவர்கள் அரசாங்கத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம் என ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவது எந்தளவிற்கு நியாயமானது.

அரசியல் சூழ்ச்சியினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை பல முறை பகிரங்கமாக அறிவித்துள்ளோம்.

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவே எதிர்க்கட்சியை போன்று செயற்படுகிறோம் என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. அரசியல் சூழ்ச்சியினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்றார்.