(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணியின் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விலகுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

Dilruwan Perera celebrates a wicket | Photo | Global | ESPNcricinfo.com

சகல துறை வீரரான 39 வயதான தில்ருவன் பெரேரா 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 161 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன்,  7 அரைச் சதங்களுடன் 1303 ஓட்டங்களை குவித்துள்ளார். 

தில்ருவன் பெரேரா டெஸ்ட் வீரராக பெரிதும் அறியப்பட்டாலும், 2007 ஆம் ஆண்டிலேயே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார். இதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்தே டெஸ்ட் அரங்கில்  அறிமுகம் பெற்றார்.

இலங்கை அணிக்காக அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் முரளிதரன் (800) மற்றும் ஹேரத்துக்கு (433) அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தில் தில்ருவன் பெரேரா உள்ளதுடன், அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய 5 ஆவது இலங்கையராகவும் உள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 13 போட்டிளில் மாத்திரமே  விளையாடி இவர், 13 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், 152 ஓட்டங்களை குவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன் எனும் சுழல் ஜாம்பவான் கோலோச்சி இருந்த காலக்கட்டத்தில் ரங்கன  ஹேரத், தில்ருவன் பெரேரா போன்றோரால் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர்.  முரளியின் ஓய்வையடுத்தே ரங்கன ஹேரத்துக்குக்கூட இலங்கை அணியில் நிரந்த இடம் கிடைத்தது. இதன் காரணமாக தில்ருவன் பெரேராவுக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. எவ்வாறாயிலும், தில்ருவன் பெரேரா விளையாடிய போட்டிகளில் இலங்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியவர் தில்ருவன் பெரேரா.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணியில் வனிந்து ஹசரங்க, ஜெப்ரே வெண்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்சன உள்ளிட்ட  இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் பலர் காணப்படுவதாலும், போதிய உடற் தகுதியை ‍அவர் கொண்டில்லாமையினாலும் அணியில் அவருக்கு இடம் கிடைக்காது வந்த நிலையில் அவர் தனது ஓய்வை முடிவை அறிவித்திருப்பார் என கிரிக்கெட் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.