( எம்.எம்.சில்வெஸ்டர்)
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கை அணி நாளைய தினம் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்தாடவுள்ளது.

சுப்பர் லீக் சுற்றின் முதல் போட்டியில் விளையாடவுள்ள தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் 16 அணிகள் பங்கேற்றன. இதில் தலா 4 குழு ஏ, குழு பீ, குழு சீ, குழு டீ என ஒவ்வொன்றிலும் தலா 4 அணிகள் அங்கம் வகித்தன.
குழுக்களுக்கிடையிலான லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறிக்கொண்டன. இதன்படி குழு ஏயிலிருந்து இங்கிலாந்து , பங்களாதேஷ் அணிகளும், பீ குழுவிலிருந்து இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகளும், குழு சீயிலிருந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும், குழு டீயிலிருந்து இலங்கை , அவுஸ்திரேலிய அணிகளுமே இவ்வாறு சுப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறிய அணிகளாகும்.
நாளை ஆரம்பமாகும் சுப்பர் லீக் சுற்றில் முதலாவது காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தென் ஆபிரிக்க அணி எதிர்கொள்கிறது.
துனித் வெல்லாலகே தலைமையிலான இலங்கை அணி போட்டி ஏற்பாடு நாடான மேற்கிந்தியத் தீவுகள், பலம் பொருந்திய அவுஸ்திரேலியாவையும் வளர்ந்து வரும் ஸ்கொட்லாந்தையும் வீழ்த்தி 6 புள்ளிகளுடன் குழு டீயில் முதலிடம் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். நாளைய தினம் நடைபெறும் மற்றுமொரு காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்தாடவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஏனைய காலிறுதிப் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியை பாகிஸ்தானும், பங்களாதேஷ் அணியை இந்தியாவும் எதிர்த்தாடவுள்ளன. காலிறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெறுவதுடன், தோல்வியடையும் அணிகள் 5 ஆம் இடம் முதல் 8 இடம் வரையான போட்டிகளில் விளையாட நேரிடும்.
சுப்பர் லீக் சுற்றுக்கான தகுதியை பெறாத மேற்கிந்தியத் தீவுகள், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே, பப்புவா நியூ கீனியா, அயர்லாந்து, உகண்டா, ஐக்கிய அரபு இராச்சியம் , கனடா ஆகியன பிளேட் (PLATE) பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளன. பிளேட் பிரிவில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் உகண்டா அணியை ஐக்கிய அரபு இராச்சிய அணியும், கனடா அணியை அயர்லாந்து அணியும் வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.