(லியோ நிரோஷ தர்ஷன்)

பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலை குறித்து கடந்த ஆண்டின் எதிர்வு கூறல்களின் பிரகாரம் 2022 ஜூன் மாத்தில் முடிவடையும் நிதியாண்டில் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி அதிகபட்சமாக 5 வீதமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம் , உயரும் பணவீக்கம் மற்றும் உடனடியான கொடுப்பனவு நெருக்கடிகள், மிதமிஞ்சிய வெளிநாட்டுக் கடன் என்பன அந்நாட்டிற்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பலமுறை பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளது. கட்டுக்கடங்காத பணவீக்கம், நடப்புக் கணக்கு மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டு இருப்புக்கள் மற்றும் பண மதிப்பிழப்புகள்  போன்ற நெருக்கடிகளும் இருந்துள்ளன. 

263 பில்லியன் டொலர் பொருளாதாரத்திற்கு  சவாலை ஏற்படுத்தும் வகையில் இரு பிரதான அச்சுறத்தல்கள் உள்ளன. 

பணவீக்கம் மற்றும்  உலகளாவிய மற்றும் உள்நாட்டு கொடுப்பனவு நெருக்கடி என்பன பாகிஸ்தானை நெருக்குதலுக்குள் தள்ளும் முக்கிய விடயங்களாகும். 

அதே போன்று கொவிட் தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ள சிக்கல்கள் ஆகியவற்றிலும் நிலைமை மோசமாகியுள்ளது.  பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு பல வருடங்களில் இல்லாத அளவுக்கு 2018-ல் சரிந்தது. ஆவ்வாறானதொரு மீண்டும் ஏற்படலாம் என்றே பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டு நவம்பர்  மாத மதிபீடுகளின் பிரகாரம் , பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டு பணம் கையிருப்பு 22.773 பில்லியன் டொலர்களாகும் என அந்நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

இதில் 16.254 பில்லியன் டொலர்கள் மத்திய வங்கியிடமும்  மீதமுள்ளவை வணிக வங்கிகளிடமும் இருந்தன. அதே வருடம் நவம்பர்  நடுப்பகுதியில் முதன்மையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக பாகிஸ்தானின் கையிருப்பு 691 மில்லியன் டொலராக குறைந்துள்ளது என்று ஜியோ நியூஸ் சேவை தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் தரவுகளின் பிரகாரம் , 2018 இல் பாகிஸ்தானின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி 5.8 வீதமாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டில் 0.99 வீதத்திலும் 2020-ல் 0.53 வீதத்திலும் குறைந்தது.

 இந்த நிலைமையானது நடப்புக் கணக்கில் பற்றாக்குறையை உருவாக்கியது. மேலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையில் நெருக்கடியை தோற்றுவித்தது.

ஒரு நிலையான உயர் பற்றாக்குறை அதன் அந்நிய செலாவணி சந்தையில் ஒரு நாட்டின் பணத்தை அதிகப்படியான விநியோகத்திற்கு வழிவகுக்கும். இது இறுதியில் பணத்தின் மதிப்பை எதிர்மறையாக பாதிக்கிறது. இதுவே பாகிஸ்தான் ரூபாய் பின்னடைவில் இருப்பதற்கும் காரணம்.

ஒரு நாடு அதன் இறக்குமதிக்கான கட்டணங்களுக்கு நிதியளிக்கவோ அல்லது அதன் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தவோ முடியாது போகும் பட்சத்தில் நெருக்கடி நிலைமை உச்சம் பெறுகிறது. அந்த வகையில் பாக்கிஸ்தான் உள்நாட்டு நுகர்வுக்கான பெரும்பாலான பொருட்களை இறக்குமதி செய்கிறது. இது இந்த  பொருளாதார அழுத்தங்களை மோசமான நிலைக்கு கொண்டுச் செல்கின்றது.

இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சவுதி அரசுடனான ஒப்பந்தம் , சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்புகள் மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகள் சிலவற்றுடனான கடன்கள் என பல்வேறு முயற்சிகளை பாகிஸ்தான் அரசு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

ஏந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாகிஸ்தானால் மற்றுமொரு நாட்டிற்கு கடனோ அல்லது ஏனைய பொருளாதார சார் ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என்பது தற்போதைய தருணத்தில் சாத்தியப்படும் என்பது ஐயமே. 

இவ்வாறானதொரு நிலைமையில் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையிலான இலங்கை குழுவின் பாகிஸ்தான் விஜயம் இரு தரப்பு பொருளாதார நெருக்கடிகளுக்கு எந்தளவு சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தும் என்பதும் சந்தேகமே. ஏனெனில் பாகிஸ்தானை போன்று இலங்கையும் தற்போது கடும் டொலர் பற்றாக்குறையை எதிர்க்கொண்டுள்ளது.

 மறுப்புறம் இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்ததின் உச்ச பலனை பெற்றுக் கொள்வதற்கு இரு நாடுகளுக்குமிடையில் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல், இரு நாடுகளுக்குமிடையிலான சந்தை வாய்ப்பினை ஊக்கப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து  இலங்கை அவதானம் செலுத்தப்பட வேண்டும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவிடம்  வலியுறுத்தியுள்ளார். 

எனவே பாகிஸ்தானின் நோக்கம் இலங்கையின் சுற்றுலாப்பயணிகளில் பயன் பெறுவது என்பது பிரதான இலக்காக உள்ளதுடன் ஏற்றுமதிகளுக்கான சந்தை வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்வதும் ஆகும். இங்கே இலங்கைக்குள்ள பொருளாதார நன்மைகள் எவை என்பன குறித்து பரந்துப்பட்ட வகையில் சிந்தித்தல் வேண்டும்.