காலியிலிருந்து எம். எம். சில்வெ ஸ்டர் 

மாற்றியமைக்க முடியாத இரும்பு கொள்கை வரைவு  ஒன்றின் மூலமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதுடன் எதிர்கால சந்ததியினருக்கு  பாதுகாப்புமிக்க நாடொன்றை  வழங்குவதே  ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான நோக்கமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நாம் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் எம்மிடமிருந்து பிரிந்து சென்ற  அனைவரையும் இணைத்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கமொன்றை அமைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டு மக்களை புதியதொரு பாதையில் வழி நடத்தி செல்வதற்காகவும் அரசாங்கதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மா பெரும் ஆர்ப்பாட்டமொன்று காலி மத்திய பஸ் நிலைய முன்றலில் நேற்று மாலை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐ. தே. க. ஆதரவாளர்கள்  ஆயிரத்திற்கும்  அதிகமானோர் பங்கேற்றி ருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐ.தே.க. ஆதரவாளர்கள் அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட  பதாகைகளை தாங்கிய வண்ணமும், கோஷங்களை எழுப்பியும் பங்கேற்றினர்.

இதன்போது உரையாற்றிய வஜிர அபேவர்தன,

"தற்போது ஆட்சி அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் சொல்லெனாத்  துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

ஐ. தே. க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த ஆர்ப்பாட்டம் காலியில் நடத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் உள்ள மக்கள் பெரும் பொருளாதார அழுத்தத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது யாரையும் குறை கூறுவதற்காகவோ, பழி வாங்குவதற்காகவோ ஏற்பாடு   செய்யவில்லை. 

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக நாட்டு மக்களை புதியதொரு  வழியில் நடத்திச் செல்வதற்கே நாம் எதிர்பார்க்கிறோம்.

மாற்றியமைக்க முடியாத இரும்பு கொள்கை வரைவு  ஒன்றின் மூலமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதுடன் எதிர்கால சந்ததியனருக்கு  பாதுகாப்புமிக்க நாடொன்றை  வழங்குவதே  ஐக்கிய தேசிய கட்சியின்  பிரதான நோக்கமாகும். 

இந்த இரும்பு கொள்கை வரைபானது 15 ஆண்டு காலத்துக்கு மாற்றி அமைக்க முடியாத கொள்கைத் திட்டமாக இருக்கும். இந்த திட்டமானது சகல சக்திகளையும் இணைத்துக்கொண்டு செயற்படக்கூடிய  ஓர் தேசிய கொள்கை திட்டமாக விளங்கும்.

இதன்படி, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரதை  கட்டி எழுப்புவதையும் எதிர்கால சந்ததியனருக்கு பாதுகாப்புமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது இலக்காகும்.

வரலாற்றின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாடு வீழ்ந்து கிடந்த போதெல்லாம் சர்வதேசத்தையும்  உள்நாட்டையும் ஒன்றாக இணைத்துகொண்ட பொறி முறையை ஐ.தே.க. செயற்படுத்தியது.

இதன் காரணமாகவே 2015 ஜனவரி 8 ஆம் திகதியன்று நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவால், 2005 ஆண்டு முதல் 2015 வரை அதிகரித்துச் சென்ற பொருட்களின் விலையேற்றம்  குறைக்கப்பட்டு, சம்பளம் அதிகரிக்கப்பட்டு பொருளாதாரம் கட்டி எழுப்பப்பட்டது.

ஆயினும், தற்போது உணவு பொருட்கள் முதல் கொண்டு அத்தியவசிய பொருட்கள் வரையில் ஒவ்வொரு பொருட்களின் விலை இரண்டு, மூன்று மடங்குகளாக  அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பதில் நாட்டின் அமைச்சர்கள், துறைமுகத்துக்கு சென்று சீமெந்து, பால் மா, எரி வாயு ஆகியன வந்துள்ளதா என பார்க்கின்றனர். இவற்றுக்கென தனியான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இதற்காகத்தான், அன்று ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு பிரிவுகளுக்கும் விசேட நிபுணர் குழுக்களை நியமித்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். இதற்கும் இன்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் அன்று திட்டினர். 

இதனால்தான், சிறந்த அறிவு மற்றும் அரசியல் ஞானம் படைத்த தலைமைதத்துவம் நாட்டுக்கு தேவை " என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, உப தலைவர் ருவன் விஜயவர்தன, பாலித்த தேவரப் பெரும உள்ளிட்ட ஐ.தே.க.வின் அங்கத்தவர்களும் ஆதரவாளர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில் ஆரம்பமான இந்த 5. 30 மணி வரை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.  பாதுகாப்பிற்காக பொலிசாரும் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு தினெத் சமல்க)