அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் கடற்கரையில் சனிக்கிழமை இரவு படகு கவிழ்ந்ததில் 39 பேர் காணாமல் போயுள்ளார்கள்.

இந்நிலையில், அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் அவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஃபோர்ட் பியர்ஸ் நகரத்திலிருந்து 72 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த படகின் மேல் ஒருவர் இருப்பதை மீனவர்கள் அவதானித்ததை அடுத்து காவல்படை அதிகாரிகள் அவரை மீட்டுள்ளனர்.

சனிக்கிழமை இரவு பஹாமாஸின் பிமினியில் இருந்து  படகு புறப்பட்ட நிலையில், மோசமான வானிலை தாக்கியதாக மீட்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்த படகு மனித கடத்தல் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத மீட்கப்பட்ட நபரின் கருத்தின்படி, பயணிகள் யாரும் உயிர்காக்கும் ஆடைகளை அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கப்பல்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி மியாமி கடலோர காவல்படையினரால் தேடுதல் பணி நடத்தப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை, உயிர் பிழைத்தவர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பிமினி தீவு பஹாமாஸின் மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டமாகும். மேலும் இது மியாமியில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது.

அதிகாரிகள் பிமினியில் இருந்து ஃபோர்ட் பியர்ஸ் வரை சுமார் 135 மைல் அகலம் கொண்ட பகுதியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை வெள்ளியன்று, பஹாமாஸுக்கு மேற்கே அதிக சுமை ஏற்றப்பட்ட கப்பலில் 88 ஹெய்ட்டியர்களைக் கண்டுபிடித்ததாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.