இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் முன்னணி பொலிவூட் நடிகையான தபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் வினோத் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அஜித்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மூத்த பொலிவுட் நடிகை தபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

இவர் அஜித் குமார் நடிப்பில் 2000ஆம் ஆண்டில் வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜீத் குமாருடன் நடிகை தபு இணைந்து நடிக்கிறார்.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த புதிய படத்தில் அஜித்குமார் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை தபு நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகை தபு 'அந்தாதுன்' படத்தில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.