( எம்.எப்.எம்பஸீர்)
தெற்கு சர்வதேச கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட 340 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 343 கிலோ 456 கிராம் நிறைக் கொண்ட ஹெரோயின் தொகை இன்று (25) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது இரு படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட 11 சந்தேக நபர்களும் அழைத்து வரப்பட்டதுடன் மேலதிகமாக மேலும் 5 சந்தேக நபர்கள் தரைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த போதைப் பொருளானது, தற்போதும் டுபாயில் மறைந்திருந்தவாறு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனும் ஹரக் கட்டாவின் பிரதான சகாவாக கருதப்படும் பாதாள உலகத் தலைவன் ' ரன் மல்லி ' என்பவரால் இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் நம்பும் நிலையில், இக் கடத்தலுக்கு மேலும் மூவரின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று கொழும்பு துறைமுகத்துக்கு, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் எடுத்து வரப்பட்டது. கடற்படை பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்ட அந்த போதைப் பொருட்கள் 13 உரப் பைகளில் 309 பக்கட்டுக்களில் அடைக்கப்பட்டிருந்தது. சந்தேக நபர்கலும், போதைப் பொருளும் கொழும்பு துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டதையடுத்து, அங்கு பாதுகாப்பு செயலர் கமல் குனரத்ன, கடற்படை தளபதி உள்ளிட்டோர் சென்று அவற்றை பார்வையிட்டிருந்தனர்.

மாத்தறை – குடாவெல்ல பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த ' சுரேஷ் புதா' எனும் மீனவ படகிலேயே இந்த ஹெரோயின் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். அப்படகின் படகோட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெரோயினைப் பெற்றுக்கொள்ள திருகோணமலையிலிருந்து ஆழ்கடலுக்கு சென்ற ' ஓஷன் புதா' எனும் மீன்பிடிப் படகிலிருந்தும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடலில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று கரைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தரையில் முன்னெடுத்த நடவடிக்கைகளில் ' சுரேஷ் புதா' எனும் படகின் உரிமையாளர், அவரது மூன்று மகன்மார் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ஒருவர் என மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறின.

அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையின் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களுடன் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது விசாரணைகள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிஉப்பு பனியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளுக்கு என உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போதைப் பொருள் மீட்பு மற்றும் சந்தேக நபர்களின் கைது தொடர்பில் நாளை பொலிசார் கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.