(நா.தனுஜா)
நாடளாவிய ரீதியில் தற்போது அடையாளங்காணப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களில் 95 சதவீதமானோர் திரிபடைந்த ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்தரப்பினர், பாடசாலை மாணவர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அண்மையகாலங்களில் நாளாந்தம் அடையாளங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்படும் நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கான சிகிச்சை வழங்கலுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையான காலமும் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துவருகின்றது.
குறிப்பாகக் கடந்த மாதம் நாளாந்தம் அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 350 - 400 இற்கு உட்பட்டதாகக் காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அந்த எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளது.
கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களின் 95 சதவீதமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்,
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள சுகாதார மேம்பாட்டுப்பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியநிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளங்காணப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ளன. தற்போதைய தரவுகள் மூலம் நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களில் 95 சதவீதமானோர் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருப்பதை அறியமுடிகின்றது.
அதாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளைப் பரிசோதனைக்குட்படுத்தும்போது அவற்றில் பெரும்பாலும் 95 சதவீதமான மாதிரிகளில் ஒமிக்ரோன் திரிபு அடையாளங்காணப்பட்டுள்ளது.
கொவிட் - 19 வைரஸ் திரிபுகள் தொடர்பான பரிசோதனைகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் ஊடாகவே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அதனூடாக வெளியிடப்பட்டுள்ள பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் மேற்குறிப்பிட்டவாறான முடிவிற்கு வரமுடியும். இருப்பினும் அண்மையகாலங்களில் சுகாதார அமைச்சின் பரிசோதனை நிலையத்தின் ஊடாகவும் அத்தகைய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் வெளியான அந்நிலையத்தின் எம்.ஆ.ஐ அறிக்கையிலும் 96 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கண்டறியப்படும் தொற்றாளர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகக் கூறமுடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு
அதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மீண்டுமொரு தடவை கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக அவ்வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் வைத்தியநிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்படும் நிலையில், வைத்தியசாலையின் வழமையான சேவை வழங்கல் நடவடிக்கைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'அண்மையகாலங்களில் நாளாந்தம் அடையாளங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்படுகின்றது. இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பெரும்பான்மையானோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.
அவ்வாறு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக்கொண்டாலும் வைரஸ் தொற்று தொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.
அதேவேளை அண்மைக்காலத்தில் கொவிட் - 19 வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது' என்றும் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை வழங்கலில் கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களுக்கு முன்னுரிமை
மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக அவசர சிகிச்சைப்பிரிவை ஒதுக்குவதற்கும் அவர்களுக்கான சிகிச்சை வழங்கலுக்கு முன்னுரிமையளிப்பதற்கும் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் வைத்தியநிபுணர் சந்தன கஜநாயக்க, தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவால் வீழ்ச்சியடையும்போது வைத்தியசாலையின் வழமையான சேவை வழங்கல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பாடசாலைகளில் கண்டறியப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார். காற்றோட்டமற்ற மூடிய வகுப்பறைகளைக்கொண்ட பாடசாலைகள் தொற்றுப்பரவல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் தீவிரமடையும் பட்சத்தில் அது புதியதொரு கொத்தணிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் தொற்றுப்பரவல்
இது இவ்வாறிருக்க, கடந்த ஓரிரு தினங்களில் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் - 19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களான ஜயந்த சமரவீர மற்றும் திலும் அமுனுகம ஆகியோருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் கோகிலா குணவர்தன ஆகியோருக்கும் கொவிட் - 19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக பண்டார கொட்டேகொட, சாரதி துஷாந்த மித்ரபால, இரா. சாணக்கியன் ஆகியோருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM