(க.கிஷாந்தன்)

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்னன் தோட்டத்தில் இன்று (25.01.2022) மாலை 3 மணியளவில் தேயிலை கொழுந்து ஏற்றி செல்ல பயன்படுத்தப்படும் லொறி சாரதி மீது சாய்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த சாரதி அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டத்தில் வசித்த 38 வயதான கருப்பையா கார்த்திகேசன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மவுண்ட்வேனன் தோட்டத்தில் தேயிலை கொழுந்து நிறுவை செய்யும் இடத்தில் லொறியை விட்டு இறங்கிய போது லொறி ஒரு பக்கத்திற்கு சாய்வதை அவதானித்துள்ளார்.

லொறியில் ஒரு பக்கத்திற்கு மாத்திரம் கொழுந்து ஏற்றப்பட்டதால் லொறி சமநிலையின்றி சாயத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து உடனடியாக லொறி சாய்வதை நிறுத்த முற்பட்ட போது லொறி அவர் மீது சாய்ந்துள்ளது.

இதன் காரணமாகவே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.