(நா.தனுஜா)

நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு அனைவரையும் உள்வாங்கிய, நிலைபேறான சமாதானத்தை உறுதிசெய்வதென்பது வலுவான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் அவசியமானதாகும்.

அதனூடாக பெருமளவான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக்கொள்ளமுடிவதுடன் பொருளாதாரத்தின் இயலுமையை மேலும் வலுப்படுத்தவும் முடியும் என்று அமைச்சர் தாரிக் அஹமட் சுட்டிக்காட்டியிருப்பதாக இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு சமூகங்களுக்கு இடையிலான மோதல்களை முடிவிற்குக்கொண்டுவருதல், மனித உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை இலக்காகக்கொண்ட செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக மோதல்கள், உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் நிதியுதவியை வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்த பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் ஜனாபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். 

அதுமாத்திரமன்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தார். 

இந்நிலையில் அமைச்சர் தாரிக் அஹமட்டின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தினால் நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்,

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளடங்கலாக இருநாடுகளுக்கும் பொதுவான சவால்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் தாரிக் அஹமட், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தொடர்புகள், முதலீடு மற்றும் நிதிச்சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் மனித உரிமைகளை உறுதிசெய்வதில் பிரிட்டினின் ஒத்துழைப்பையும் மீளவலியுறுத்தினார்.

அத்தோடு இலங்கைக்கான தனது விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தாரிக் அஹமட், 'நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு அனைவரையும் உள்வாங்கிய, நிலைபேறான சமாதானத்தை உறுதிசெய்வதென்பது வலுவான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் அவசியமானதாகும். அதனூடாக பெருமளவான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக்கொள்ளமுடிவதுடன் பொருளாதாரத்தின் இயலுமையை மேலும் வலுப்படுத்தவும் முடியும். 

அத்தோடு சமூகங்களுக்கு இடையிலான மோதல்களை முடிவிற்குக்கொண்டுவருதல், மனித உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை இலக்காகக்கொண்ட செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக மோதல்கள், உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் நிதியுதவியை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விஜயத்தின்போது தாரிக் அஹமட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தார்.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் முக்கியத்துவம் குறித்தும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியின் பின்னரான பொருளாதார மீட்சி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளடங்கலாக இருதரப்பினதும் அக்கறைக்குரிய பொதுவான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் தாரிக் அஹமட், அங்கு அரசியல் தலைவர்களையும் சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். 

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் கரிசனைக்குரிய விடயங்கள், உள்ளுராட்சிமன்ற நிர்வாகம், அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கும் வகையிலான அரசியல் பங்கேற்பு என்பன பற்றி இதன்போது ஆராயப்பட்டது. 

அத்தோடு சகிப்புத்தன்மையுடன் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மதச்சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் பிரிட்டன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.