ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியம் – 04

25 Jan, 2022 | 02:53 PM
image

ஸ்ரீ ஸக்தி சுமனன்

ஸ்ரீ அரவிந்தரின் பார்வை தீட்சணியம் மிக்கது; குழப்பங்கள் அற்றது, வீரியம் மிக்கது. 

அவரது பகவத்கீதை உரையில் தர்மம் என்ற கோட்பாட்டினைப் பற்றிய விளக்கத்தில் தர்மத்தின் இரண்டு நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

முதலாவது, குறித்த காலத்தில் குறித்த மனித இனக்குழு அவர்களின் மன, அக முதிர்ச்சிக்கு ஏற்ப கொண்டிருக்கும் நம்பிக்கைகள், பழக்கங்கள், வழக்குகள். இவை அந்தக்காலத்திற்கு மாத்திரம் ஏற்ற தர்மங்கள். 

இவற்றை காலம் மாறும் போது பயிற்சிக்க, பின்பற்ற முடியாது. இதைத் தாண்டி ஒரு மாறாத பிரபஞ்ச தர்மம் எல்லாவற்றையும் நடாத்திக்கொண்டிருக்கும்.

இதிலிருந்து தான் காலத்திற்கு உட்பட்ட முதல் வகை தர்மம் உருவாக்கப்பட்டிருக்கும். புராணங்கள் இந்த இரண்டையும் கொண்டிருக்கும். நாம் என்றும் மாறாத அடிப்படை தர்மத்தை அறிந்துகொண்டு காலத்திற்கு உட்பட்ட மாறக்கூடிய தர்மத்தை விலக்கி ஞானத்தைப் பெறக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆகவே புராணங்களைப் படிக்கும் போது குறியீட்டு மொழியினைப் புரிந்துகொள்வதன் மூலம் மாறாத பிரபஞ்ச தர்மத்தைப் புரிந்துகொள்ளலும், கதைகளின் மூலம் குறித்த காலத்தில் நடைபெற்ற வரலாற்று, கவித்துவ அமிசங்களைப் புரிந்துகொள்ளுதலும் அவசியமாகிறது.

இந்த அடிப்படையிலேயே ஸாவித்ரி காவியம் ஸ்ரீ அரவிந்தரால் படைக்கப்பட்டிருக்கிறது. 

ஸ்ரீ அரவிந்தர் தனது ஐம்பது வருட யோக வாழ்க்கையின் யோக அனுபவத்தையும், அதனால் அறிந்துகொண்ட ஆன்மாவின் பரிணாம வரலாற்றையும், மெய்யியல் கோட்பாடுகளையும் பிரபஞ்சவியல் உண்மைகளையும் ஸாவித்ரி காவியத்தில் தொகுத்துத் தருகிறார்.

மனிதனது உணர்வு  அல்லது ஆன்மா மனதின் தளையுடன் எப்படி உடலிற்குள் இருந்து உயர்வு பெறுகிறது என்பதை ஏழு தளங்களாக விபரிக்கிறார்.

 பூர், புவ, ஸ்வஹ, மஹ, சத், சித், ஆநந்தம் என்ற ஏழுதளங்களிற்கூடாக உயர்வு பெறுவதை ஸாவித்ரி காவியம் எடுத்துரைக்கிறது. 

இந்த விபரிப்பில் எப்படி மறையியல் ஆற்றல்கள் இந்தப் பிரபஞ்சத்தில் செயற்படுகிறது என்ற விபரங்கள் தரப்படுகிறது.

மனிதனது பரிணாமம் பற்றி விபரிக்கையில் எப்படி ஒரு பூமியில் தாழ் உணர்ச்சிகளில் சிறைப்படுத்தப்பட்ட பௌதீக சுகங்களுக்குட்பட்ட தாமஸீகம் நிறைந்த ஒரு மனிதன் ஸாவித்ரி என்ற பராசக்தியின் அன்பு நிறைந்த கருணையால் எப்படி தன்னில் மெதுவாக ரஜோகுணத்தை வளர்த்து பூரண ஸத்துவம் மனிதனாக மாறுகிறான் என்ற மனிதனின் பரிணாம வளர்ச்சி தெளிவாக வரைபுபடுத்தியுள்ளார்.

இந்தக்காவியத்தின் மனித மனத்தின் வகைப்படுத்தல் உரையாடப்படுகிறது. 

ஏன் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஊனமுற்றதாக இருக்கிறது, ஏன் மரணம் ஒருவனை ஆட்கொள்கிறது? பிரபஞ்சத்தில் இறப்பு என்ற ஒன்று இருப்பதன் காரணம் என்ன?ஏன் நாம் துன்பம் என்ற ஒன்றை அனுபவிக்கிறோம்? ஆனந்தம் என்றால் என்ன போன்றவற்றின் மெய்யியல் விளக்கம் உரையாடப்படுகிறது.

இச்சாசக்தி என்பது என்ன? கர்மம் என்பது என்ன? கடவுள் என்பது என்ன? தெய்வங்களின் ஆற்றல்கள் விளக்கங்கள் என்ன? மனித உட்லில் உள்ள சக்கரங்கள் எவை? இவற்றைப்பற்றிய தாந்திரீக உண்மைகள் எவை?இவை எல்லாம் வெறும் நம்பிக்கைகளா?உண்மை அனுபங்களா? இவையெல்லாம் உரையாடப்படுகிறது.

ஸாவித்ரி கூறும் ஆன்மீகம் யோகசாதனை என்பவை இதற்கு முன்னர் மதங்களால் கூறப்பட்ட ஒரு ஆன்மா முன்னேறி இறைத்தன்மையை அடைகிறது, பரலோகத்தை அடைதல் என்ற கோட்பாடுகளுக்குநேர் எதிரானது. 

ஸ்ரீ அரவிந்தரின் யோகசாதனை யோக ஆற்றல்கள் மனித உடலிற்கு வருவதைப் பற்றி பேசுகிறது. 

இதற்கு முன்னர் யோகசாதனை என்பது ஒரு மனித ஆன்மா பரிணாமத்தில் உயர்ந்து தெய்வீக நிலையை அடைதல் பற்றி மாத்திரமே கூறியது. ஆனால் ஸாவித்ரி காவியம் மரணத்தை வென்று தெய்வீக ஆற்றலை தபஸின் மூலம் பூமிக்குக் கொண்டுவருவதைப் பற்றி உரையாடுகிறது.

எல்லாவித மத, யோக சம்பிரதாயங்களும் உடல் வாழ்க்கையைத் துறந்து, பூமியில் நிறைந்துள்ள துன்பங்கள், அறியாமையுடன் இறைத்தன்மையைப் பெறமுடியாது என்று போதிக்கிறது. 

இறந்தபின்னர் சொர்க்கம், நிர்வாணம், முக்தி போன்றவை கிட்டும் அதைப் பெற மனிதன் தனது உலக வாழ்க்கையை சரியாக வாழவேண்டும் என்று போதிக்கிறது. 

அதாவது இறந்தபின்னர் கிடைக்கப்போகும் இனிய வாழ்க்கைக்கு இப்போது பாடுபட்டு உழைக்க வேண்டும் என்று போதிக்கிறது.

ஆனால் ஸ்ரீ அரவிந்தர் இதை உபநிஷதக் கருத்துக்களைக் கொண்டு மறுக்கிறார்; நாம் வாழும் போது இப்போதே, இங்கேயே, எதையும் மறுக்காமல் இறைத்தன்மையை அடையமுடியும் என்பதற்குரிய வழிமுறையாக ஸாவித்ரி காவியத்தை முன்வைக்கிறார்.

(தொடரும்….)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'அழுவதற்கு நேரமில்லை' - நூல் பார்வை

2022-11-24 09:50:38
news-image

அடம்பனில் ஓர் ஆற்றல் கலைக்கல்லூரி

2022-11-23 15:47:20
news-image

'நிலைமாற்றத்திற்கான பயணம்' மேடை நாடக விழா

2022-11-23 14:25:16
news-image

‘இலக்கிய வித்தகர்’ விருது பெற்றார் சம்மாந்துறை...

2022-11-22 15:04:03
news-image

திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி...

2022-11-16 14:40:44
news-image

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

2022-11-15 15:05:04
news-image

நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர்...

2022-11-14 12:25:05
news-image

நிசாந்தம் கவிதை நூல் ஒரு கண்ணோட்டம்

2022-11-12 11:22:08
news-image

பாரம்பரியத்தை போற்றும் 'கோவார்' சுவரோவியக் கலை

2022-11-10 21:37:20
news-image

கர்நாடக சங்கீதம் தவிர்ந்த இசைப் பாடல்களை...

2022-11-05 19:51:13
news-image

உங்களது 'நீங்கள்' பயங்கரமானவர்கள்! - கவிதாயினி...

2022-10-27 16:51:30
news-image

காயத்ரி சித்தரின் 89 ஆவது ஜெயந்தி

2022-10-26 16:27:05