2021/2022 பெரும் போகத்தில் நெல் அறுவடையில் குறைவு ஏற்பட்டால் அதனால் பாதிப்புக்குள்ளான நெல் விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி அவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உர நெருக்கடிக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக, கரிம அல்லது இரசாயன உரங்களை கோரி இலங்கை முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக, இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியாருக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி வழங்கப்பட்ட போதிலும் நாட்டில் நிலவும் கரிம மற்றும் இரசாயன உரத் தட்டுப்பாட்டிற்கு எதிராகவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந் நிலையிலேயே மேற்கண்ட தீர்மானத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.