(இராஜதுரை ஹஷான்)

பொது மக்களுக்கு தேசிய மின்விநியோக கட்டமைப்பு மீதான நம்பிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. 

மின்விநியோகம் தொடர்பிலான உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்படுமா அல்லது தடைப்படாத என்று மின்பாவனையாளர்கள் எண்ணும் நிலைமை தற்போது காணப்படுகிறது. பொது மக்களுக்கு தேசிய மின்விநியோக கட்டமைப்பு மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறையில் செயற்படுத்த தவறியமையே தற்போதைய மின் விநியோக பிரச்சினைக்கு பிரதான காரணியாக உள்ளது. 

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து மின்விநியோகம் சீராக வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது.

மின் உற்பத்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு எவரையும் குறை கூற முடியாது.

மின்சாரத்துறை தொடர்பில் சிறந்த செயற்திட்டத்தை வகுக்காமல் இருப்பதன் விளைவை தற்போது எதிர்க்கொண்டுள்ளோம்.

2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 70 சதவீதமாக அதிகரிக்கப்படும் என  அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.