(நா.தனுஜா)

மின்துண்டிப்பு விவகாரத்தில் உரியவாறான திட்டமிடலின்மையால் கைத்தொழில் மற்றும் வணிக செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் நிலையுருவாகியிருப்பதுடன் அதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது.

மறுபுறம் மின்துண்டிப்பினால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்குப் பொறுப்புக்கூறுவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வருங்காலங்களில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அரசாங்கத்தின் வசமுள்ள திட்டம் என்னவென்பது குறித்து உடனடியாகத் தெளிவுபடுத்தப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மண்ணெண்ணெய் விளக்கு ஒன்றை ஏந்தியவாறு வந்து கலந்துகொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, அங்கு மேலும் கூறியதாவது:

இன்று (நேற்று) தொடக்கம் நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் உள்ளடங்கலாக பல்வேறு துறைகளிலும் பாரதூரமான தாக்கங்கள் ஏற்படும். இலங்கை மின்சாரசபைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு அவசியமான டொலரை வழங்குமாறு சக்திவலு அமைச்சர் மின்சாரத்துறை அமைச்சிடம் கோருகின்றார். 

மின்சாரசபைக்கு அவசியமான எரிபொருளை விநியோகிக்கின்ற பொறுப்பு இலங்கைப் பெற்றோலியக்கூட்டுத்தானத்திற்கு இருப்பதுடன் நீண்டகாலமாக இதே முறைதான் பின்பற்றப்பட்டுவருகின்றது. 

அவ்வாறிருக்கையில் இவ்விடயம் தொடர்பில் இரண்டு அமைச்சர்கள் முரண்பட்டுக்கொள்வது மக்களின் அன்றாட வாழ்வில் பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டில் அரசாங்கமொன்று இயங்கவேண்டியதன் அவசியம் என்னவென்ற கேள்வியெழுகின்றது. எனவே மின்துண்டிப்பு விவகாரத்தில் உரியவாறான திட்டமிடலின்மையால் கைத்தொழில் மற்றும் வணிக செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் நிலையுருவாகியிருப்பதுடன் அது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

அதேபோன்று மின்துண்டிப்பால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்குப் பொறுப்புக்கூறுவது யார்? அதுமாத்திரமன்றி எதிர்வருங்காலங்களில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அரசாங்கம் கொண்டிருக்கின்ற திட்டம் என்ன? நாட்டிற்கு அவசியமான எரிபொருளை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்வதற்கென 500 மில்லியன் டொலர் நிதியுதவியை அந்நாடு வழங்கியிருக்கின்றது. எமது நாட்டிற்கு மாதமொன்றுக்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு 350 மில்லியன் டொலர்கள் அவசியமாகும். 

எனவே இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள நிதியுதவியைப் பயன்படுத்தி ஒன்றரை மாதங்களுக்குப் போதுமான எரிபொருளை மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும். அது தற்போதைய நெருக்கடிக்கான தீர்வாக அமையுமா? இவ்வாறு பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்ற நிலையில், இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக அண்மையகாலங்களில் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்திருப்பதுடன் அதன் விளைவாக மக்களின் வாழ்க்கைச்செலவு உயர்வடைந்துள்ளது. பொருட்களின் விலையேற்றத்தினாலும் மத்திய வங்கியினால் புதிதாகப் பெருந்தொகையான பணம் அச்சடிக்கப்பட்டமையினாலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

அதேவேளை மறுபுறும் அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இவ்வாறு தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பல மணிநேரம் வரிசையில் காத்திருப்பதற்காகவா மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள்? இந்நிலை தொடரும் பட்சத்தில் எதிர்வரக்கூடிய சிங்கள, தமிழ் புத்தாண்டின்போது நாட்டுமக்கள் மிகமோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும். அதுமாத்திரமன்றி மக்கள் உயிர்வாழ்வதற்காக கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலைக்குத் தளப்படுவார்கள்.

 மேலும் தூரநோக்கு சிந்தனையோ அல்லது விஞ்ஞானபூர்வ அடிப்படைகளோ இன்றி இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாக நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆரம்பத்தில் அவர்களுக்கு நட்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறிய அரசாங்கம், இப்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேதன உரத்தை உரியவாறு பயன்படுத்திய பின்னரும் விளைச்சலைப் பெற்றுக்கொள்ளமுடியாமல்போன விவசாயிகளுக்கு மாத்திரமே நட்டஈட்டை வழங்கப்போவதாகக் கூறுகின்றது. 

அவ்வாறனெனில், இரசாயன உர இறக்குமதித்தடையினால் பாதிக்கப்பட்ட ஏனைய விவசாயிகளின் நிலையென்ன? அதேபோன்று அரிசி உற்பத்தியில் தன்னிறைவடைந்த நாடாகத் திகழ்ந்த எமது நாடு, தற்போது சீனாவிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி உற்பத்தியில் இரசாயன உரம் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே காண்பிக்கப்போகின்ற ஆதாரம் என்ன?

இவ்வாறு நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில், முதலில் நிதிநெருக்கடியை சீர்செய்வதற்காக சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச பொதுக்கட்டமைப்பின் உதவியை நாடுமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுதித வருகின்றோம். இருப்பினும் அரசாங்கம் குறுங்காலநோக்கு அடிப்படையில் சீனா போன்ற நாடுகளிடம் நிபந்தனைகளின் அடிப்படையில் கடன்களைப் பெற்றுவருகின்றது. 

அதேபோன்று ஏற்றுமதிகளை அதிகரித்தல், சுற்றுலாப்பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நாட்டிற்குப் பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்கு ஏற்றவாறான செயற்திறனான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தோம். 

சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாக இவ்வனைத்து நடவடிக்கைகளும் நிச்சயமாக செயற்படுத்தப்படும் என்று உறுதியளிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.