நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதிகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் படல்கம பகுதியில் வைத்து கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மோட்டார் சைக்கிள்களை திருடி, அவற்றின் இயந்திர எண்களை மாற்றி, வாகனத்தகடு இலக்கங்களையும் மாற்றி போலியான எண்களை பொருத்தி மோட்டார் சைக்கிள்களை ஏனையவர்களுக்கு விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபரை அதிகாரிகள் கைதுசெய்தபோது அவரிடமிருந்து, மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனுவில பகுதியில் திருடப்பட்ட போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது சமூக வலைத்தளங்களிலும் முக நூல்களிலும் விளம்பரம் செய்து அடையாளம் காணக்கூடிய நபர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபர் 26 வயதுடைய படல்கம பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.