டுபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் உள்ள பாகிஸ்தான் அரங்கில் உலகின் பிரமாண்டமான திருக்குர்ஆன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இதனை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகின் 1,400 ஆண்டுகால வரலாற்றை கொண்ட புனித நூலான திருக்குர்ஆனை தங்கம் மற்றும் அலுமினியத்தால் ஆன எழுத்துருக்களுடன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷாகித் ரசம் என்ற கலைஞர் பிரமாண்டமாக வடிவமைத்துள்ளார். 

பொதுவாக திருக்குர்ஆன் பாரம்பரிய முறைப்படி காகிதம், துணி அல்லது தோலால் உருவாக்கப்படும்.

இதில் சற்று வித்தியாசமாக அமீரகத்தில் ஏற்கனவே வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஷாகித் ரசம் என்ற கைவினை கலைஞர் பிரமாண்டமான அமைப்பில் திருக்குர்ஆனை உருவாக்கியுள்ளார். 

இந்த திருக்குர்ஆன் நூல் கடந்த 5 ஆண்டுகளாக கராச்சியில் உருவாக்கப்பட்டு வந்தது. பிரமாண்டமான இந்த புனித நூலின் உயரம் 8½ அடியாகவும், அகலம் 6½ அடியாகவும் உள்ளது.

ஒரு பக்கத்திற்கு 150 வார்த்தகைகள் என மொத்தம் 550 பக்கங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எழுத்துக்கள் மையால் எழுதப்படவில்லை. மாறாக தங்கம் மற்றும் அலுமினிய தகடுகளால் கலை நயத்துடன் கூடிய எழுத்துருக்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ள பிரமாண்டமான திருக்குர்ஆன் 6¾ அடி உயரமும், 44 அடியாகவும் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்த பிரமாண்டமான புனித நூல் அந்த சாதனையை முறியடித்து விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது.

தற்போது இந்த உலகின் பிரமாண்டமான திருக்குர்ஆன் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பாகிஸ்தான் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனை பல்வேறு நாட்டை சேர்ந்த பார்வையாளர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.